நெல்லை: நீலகிரி அருகே பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 35க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருந்ததில் அடிக்கடி புல்லட் யானை மட்டும் குடியிருப்புகளை இடித்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தூக்கிச்சென்று வந்தது. 35க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து, அந்த பகுதி மக்களையும் தாக்கி வந்தது. இதனால் கேரள, தமிழ்நாடு மாநில எல்லையான நீலகிரி, பொள்ளாச்சி பகுதி மக்கள் புல்லட் யானையால் நிம்மதி இழந்தனர். இதையடுத்து புல்லட் யானையை விரட்ட வனத்துறையினர் 2 கும்கி யானைகளை கொண்டு வந்து முயற்சி செய்தனர்.
கும்கி யானைகளை பார்த்தவுடன் புல்லட் யானை புதருக்குள் பதுங்கியது. அதைத்தொடர்ந்து வேறுவழியில்லாமல் வனத்துறையினர் புல்லட் யானையை நேற்று நீலகிரியில் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். இதன் மூலம் புல்லட் யானையை பிடிக்க வனத்துறையினரின் 3 நாட்கள் முயற்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து இரவோடு இரவாக புல்லட் யானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு வந்தனர். நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் அகத்தியர் மலை யானைகள் சரணாலயத்திற்கு வனத்துறையினர் கொண்டு வந்தனர்.
அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக கோதையாறு அணை அடர் வனப்பகுதிக்கு புல்லட் யானை கொண்டு செல்லப்பட்டது. அங்கு களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் இளையராஜா மற்றும் களக்காடு வன கோட்டத்தின் இயக்குனர்கள் நேரடி பார்வையில் பாதுகாப்புடன் புல்லட் யானையை வனத்துறையினர் அடர் வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே கேரள- தமிழக எல்லையில் அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டு, இதே போல் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post நீலகிரி, பொள்ளாச்சி மக்களை அச்சுறுத்திய புல்லட் யானை நெல்லை வனப்பகுதியில் விடப்பட்டது appeared first on Dinakaran.