நீர்வள மேலாண்மை 2024″ விருது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் துரைமுருகன்

6 hours ago 2

சென்னை: நீர்வள மேலாண்மை 2024″ விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து பெற்றார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (25.4.2025) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் சந்தித்து, இந்திய அரசின் ஒன்றிய நீர்பாசன மற்றும் மின் வாரியத்தால் (Central Board of Irrigation and Power) உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு (World Bank alded Tamil Nadu Irrigated Agriculture Modernisation Project) வழங்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான “சிறந்த ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை 2024” தேசிய விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

ஒருங்கிணைந்த அணுகுமுறையின் வழியாக, தமிழ்நாடு நீர் மேலாண்மை மற்றும் பாசன நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் வேளாண், கால்நடை மற்றும் மீன்வள உற்பத்தியை மேம்படுத்தியதால், ஒன்றிய அரசின் “சிறந்த ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை 2024” விருது கிடைக்கப்பெற்றது. இத்திட்டத்தின் வெற்றிக்காக, முக்கியமான நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டு, நீர்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த உற்பத்தியை அதிகப்படுத்துதல் ஆகியவை இந்த விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வெற்றியானது, நீர்வளத்துறையின் எதிர்கால முயற்சிகளுக்கு பெரும் ஊக்குவிப்பு அளிப்பதாக அமையும். உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டமானது.

காலநிலை மாற்றத்திற்கேற்ற பாசன வேளாண்மை மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு, 13.42 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுடைய வருமானம் 25 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் நீர் ஆதார மேம்பாடு மற்றும் புனரமைப்பின் கீழ் 2,626 கண்மாய்கள். 353 தடுப்பணைகள். 5,026 கி.மீ நீளமுள்ள 10601 விநியோகக் கால்வாய்கள் மற்றும் 78 செயற்கை நீர்ச்செறிவூட்டும் கிணறுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 1,854 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு, 20.39 லட்சம் மீட்டர் நீர் சேமிப்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்தில், 703 பாசனக் குளங்கள் மற்றும் 1,258 பண்ணைக் குட்டைகளை பயன்படுத்தி 67,000 ஏக்கரில் நிலையான மீன் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் தனிநபர் ஆண்டு வருமானம் கூடுதலாக ரூ.90,000 அதிகரிப்பட்டுள்ளது. வேளாண்மையில், 1.85 லட்சம் ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறை (System of Rice Intensification) பின்பற்றப்பட்டு, 10 பில்லியன் கன அடிக்கு மேல் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், 57,000 ஏக்கரில் பாய்ச்சல் மற்றும் காய்ச்சல் முறை (Alternate Wetting and Drying) பின்பற்றப்பட்டு, 25 முதல் 40 சதவிகித மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைத்துள்ளது. 32,000 ஏக்கரில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் மூலம் 15,145 விவசாயிகளுக்கு இப்பாசன முறை அமைக்கப்பட்டு நீர் பயன்பாட்டுத் திறன் மேம்படுத்தப்பட்டு சாகுபடி செலவுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

மின்னணு சந்தை மூலம் ரூ.29 கோடி மதிப்புள்ள 11.687 மெட்ரிக் டன் தானியங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 36,902 விவசாயிகளும் 3,548 வியாபாரிகளும் பயனடைந்துள்ளனர். வேளான் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை 190 தொழில்முனைவோர்களுக்கு ரூ.625.44 லட்சம் வேளான் சார்ந்த தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கறவைமாடுகளில், தனுவாஸ் கிராண்ட் என்ற திரவ ஊட்டச்சத்து கலவை அளிப்பதன் மூலம் பசுக்களின் பால் உற்பத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முருகானந்தம்,

இ.ஆ.ப., உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு ஜவஹர் இ.ஆ.ப.. நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர். மங்கத் ராம் சர்மா. இ.ஆ.ப., வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலாளர் ஆணையர் ஆபிரகாம், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப.. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் நா.பெலிக்ஸ், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), பொறியாளர். சா. மன்மதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post நீர்வள மேலாண்மை 2024″ விருது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Read Entire Article