நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை, சின்னசுருளி அருவிகளில் குளிக்க அனுமதி

3 hours ago 2

தேனி: நீர்வரத்து சீரானதை தொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி, சின்னசுருளி அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து குளித்து மகிழ்வர். கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, வெள்ளக்கெவி, வட்டக்கானல், பாம்பார்புரம் போன்ற நீர்பிடிப்புப் பகுதிகளில் மழைபெய்தால் அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். நேற்று முன்தினம் இந்தப் பகுதிகளில் பெய்த மழையால் நேற்று நீர்வரத்து அதிகரித்து திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனடியாக வனத்துறையினர் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இதையடுத்து பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மழை இல்லாததால் அருவிக்கு நீர்வரத்து சீரடைந்தது. இதையடுத்து இன்று காலை பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதேபோல மேகமலை வனப்பகுதி, வெள்ளிமலை, அரசரடி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக வருசநாடு அருகே கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் உள்ள சின்னசுருளி அருவியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இன்று அருவியில் நீர்வரத்து சீரடைந்ததால் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இருப்பினும் பாதுகாப்பு கருதி தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை, சின்னசுருளி அருவிகளில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article