வருசநாடு, டிச. 9: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததையடுத்து மூலவைகை ஆற்றில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், காந்தி கிராமம், ஐந்தரைப்புலி, நொச்சி ஓடை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் போது மூலவைகை ஆற்றில் நீர்வரத்து இருக்கும். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேகமலை வனச்சரக பகுதியில் மழை பெய்தது.
இதனால், வருசநாடு அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் மூலவைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த பகுதிகளில் போதிய மழை இல்லாததால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்த நிலையில், மூலவைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் முக்கிய நீர்வரத்து ஆறாகவும், 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மூலவைகை ஆறு உள்ளது.
மூலவைகையாற்றை ஒட்டி வாலிப்பாறை, முருக்கோடை, தும்மக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், குன்னூர் என 100க்கும் அதிகமான மலைகிராமங்கள் வழியாக மூலவைகையில் செல்லும் தண்ணீர் ஆண்டிபட்டி வைகை அணை பகுதியை சென்றடைகிறது. கரையோர மலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மூல வைகையாற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து போதுமான அளவு குடிநீர் சப்ளை கிடைக்கும் என்பதாலும், கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்கும் என்பதாலும் மலைக்கிராம பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.