சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வளர்ச்சி, கட்டமைப்பு என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்யும் தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம் கடந்த அக்டோபர் 18-ம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியும், பல்வேறு உழவர் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்த பிறகும், தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
சிறப்புத் திட்டம் என்று அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு நிலம் எடுப்பதை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள் கொண்டு வந்த தமிழக அரசு, அதன்மீது எந்த விவாதமும் நடத்தாமல் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியது. அந்தச் சட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கவர்னரும் ஒப்புதல் அளித்திருந்தார். உழவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனுக்கு எதிரான இந்த சட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். பல்வேறு உழவர் அமைப்புகளும் இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. அதைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தச் சட்டத்திற்கான விதிகளை வகுத்திருக்கும் அரசு, கடந்த 18-ம் தேதி முதல் சட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண் சார்ந்த ஏதேனும் ஒரு திட்டத்தை செயல்படுத்த விரும்புபவர்கள், அதை சிறப்புத் திட்டமாக அறிவித்து, அதற்கு மாநில அரசின் ஒப்புதலை பெற்று விட்டால், அத்திட்டத்திற்காக அவர்கள் கையகப்படுத்தி வைத்துள்ள நிலத்திற்கு அருகில் உள்ள ஓடைகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையும் எடுத்துக் கொள்ள முடியும். அவற்றுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனம் வேறு இடங்களில் வேறு இடங்களில் உள்ள நிலங்களை அரசிடம் ஒப்படைத்து விட்டால் போதும்.
சிறப்புத் திட்டத் தகுதிக்காக விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு குறைக்கப்பட மாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்று உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சில நடைமுறைகளுக்குப் பிறகு சில நிபந்தனைகளுடன், தனியார் நிலங்களை ஒட்டியுள்ள ஏரி, குளங்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இந்த விதிகளின்படி அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் ஏற்கனவே நீர்நிலைகளின் எண்ணிக்கை மற்றும் பாசனப் பரப்பு குறைந்து வரும் நிலையில், இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இப்போதுள்ள குறைந்த அளவிலான நீர்நிலைகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விடும். இதை அனுமதிக்க முடியாது.
தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மொத்தம் 41,127 ஏரிகள் இருந்தன. அவற்றின் மொத்தக் கொள்ளளவு 347 டி.எம்.சி. இது தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணை, வைகை அணை, பவானி அணை, சாத்தனூர் அணை, அமராவதி அணை, தென்பெண்ணையாறு அணை உள்ளிட்ட அனைத்து அணைகளின் கொள்ளளவை விடவும் அதிகம் ஆகும். ஆனால், அவற்றில் சுமார் 15 ஆயிரம் ஏரிகள் இப்போது என்ன ஆயின என்பதே தெரியவில்லை. இப்போது 27 ஆயிரம் ஏரிகள் மட்டும் தான் பயன்பாட்டில் உள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பாசனப்பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், ஒரே ஒரு பாசனத் திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை. புதிய பாசனத் திட்டத்தை செயல்படுத்த திறனற்ற தி.மு.க. அரசு, குறைந்தபட்சம் இருக்கும் நீர்நிலைகளையாவது பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ஏற்கனவே இருக்கும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்காக சிப்காட் அமைப்பின் சார்பில் 45,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நில வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நில ஒருங்கிணைப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய தேவை என்ன? அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தங்களுக்கு வேண்டிய சில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சட்டம் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது உழவர்களுக்கும், பொதுமக்களும் இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.
ஒருபுறம் நீர்நிலைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் நீர்நிலைகளின் அருகில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. காலம், காலமாக ஓர் இடத்தில் குடியிருக்கும் மக்களை, அவர்கள் இருக்கும் இடம் நீர்நிலைப் புறம்போக்கு என்று கூறி திராவிடமாடல் அரசு துரத்தி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னொருபுறம் நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு தாரை வார்க்கிறது என்றால், தி.மு.க. அரசு யாருக்காக செயல்படுகிறது? என்பதை உணரலாம்.
நீர்நிலைகளில் எந்தவித கட்டுமானங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றுக்கு சென்னை ஐகோர்ட்டு அண்மையில் ஆணையிட்டிருந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அடுத்த சில நாட்களிலேயே நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் சட்டத்தை திராவிட மாடல் அரசு செயல்படுத்துகிறது என்றால், தனியார் நிறுவனங்களுக்கு அந்த அரசு எந்த அளவுக்கு கடமைப்பட்டுள்ளது? என்பதை மதிப்பிட முடியும். நீர்நிலைகளை அழித்து விட்டு, சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டின் இன்றையத் தேவை பாசனப் பரப்பை அதிகரிப்பதுதான். அதற்கான புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டுமே தவிர, இருக்கும் நீர்நிலைகளையும் தாரை வார்க்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதை திரும்பப் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.