"நீதி உறுதி செய்யப்பட வேண்டும்.." - என்.சி.பி. தலைவர் கொல்லப்பட்டதற்கு கார்கே கண்டனம்

3 months ago 20

மும்பை,

முன்னாள் மந்திரியான பாபா சித்திக் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

இந்த சூழலில் பாபா சித்திக், மும்பை பாந்திரா கிழக்கு நிர்மல் நகர், கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஷீசான் சித்திக் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்று இருந்தார். அப்போது அலுவலகம் அருகே பாபா சித்திக்கை பின்தொடர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது 3 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இந்த சம்பவத்தில் பாபா சித்திக் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மும்பை போலீசார் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் மந்திரி பாபா சித்திக் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் அரியானாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் என்.சி.பி. தலைவர் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மராட்டிய முன்னாள் மந்திரி பாபா சித்திக்கின் சோகமான மறைவு வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துயரத்தின் இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதி உறுதி செய்யப்பட வேண்டும், தற்போதைய மராட்டிய அரசு முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பொறுப்புக்கூறல் மிக முக்கியமானது" என்று அதில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.

Read Entire Article