
திருவனந்தபுரம்,
நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் 'ஜல்' நீட் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் பயிற்சி மையத்தில், மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியும், மாணவிகள் மீது காலணியை தூக்கி வீசியும் உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் போலீசார், ஜலாலுதீன் அகமது மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர் உடனடியாக கேரளாவுக்கு தப்பிச்சென்று விட்டார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவுப்படி ஜலாலுதீன் அகமதுவை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஆய்வாளர்கள் மாரியப்பன், விஜி தலைமையிலான தனிப்படை போலீசார் தற்போது கேரளா மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். .
அங்கு அவரது வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விரைவில் கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவர்கள், நீட் பயிற்சி மைய ஊழியர்கள்,, முன்னாள் ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் போன்ற பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.