ஐதராபாத்,
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா. இவர் 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், சரியான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை. அதன் பிறகு நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். நிச்சயதார்த்தமும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்தது.
இதற்கிடையே சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செயல் நிர்வாக தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.தாரக ராமாராவ்தான் காரணம் என்று கூறி தெலுங்கானா மந்திரி கொண்டா சுரேகா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மந்திரி சுரேகாவின் இந்த சர்ச்கையான பேச்சிற்கு நடிகர் நானி, நாக சைதன்யா மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும், நடிகை சமந்தா 'எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதுபற்றி ஊடகங்களில் யாரும் பேச வேண்டாம்' என்று தெரிவித்து இருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக மந்திரி சுரேகா நடிகை சமந்தாவிற்கு பதிலளித்துள்ளார்,
அதில் "எனது கருத்துக்கள் ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதை கேள்வி கேட்பதற்காகவே தவிர, உங்களை காயப்படுத்துவதற்காக அல்ல. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் எனக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக ஒரு லட்சியவாதியாகவே தெரிகிறீர்கள். எனது கருத்துக்களால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ புண்பட்டால், எனது கருத்துக்களை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன். வேறுவிதமாக இதை பெரிதாக நினைக்க வேண்டாம்" என்று மந்திரி கொண்டா சுரேகா சமந்தாவிற்கு பதில் கொடுத்துள்ளார்.