நீங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியா?

4 weeks ago 7

நீங்கள் கூகுள் மேப் உதவியுடன் செல்லும் போது வழி தவறினால், கூகுள் மேப் உங்களை கண்டிக்கவோ அல்லது திட்டுவதோ இல்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி, ‘‘நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், நான் கூறுவதை நீங்கள் எப்படி மீறலாம்? இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும், பெட்ரோலையும் செலவழிக்க வைக்கப் போகிறது, மேலும் நீங்கள் போய்ச்சேர வேண்டிய சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ என்று அலறுவதில்லை. ஒருவேளை அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள். மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும்.

நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல. இறைமக்களே, இதில் ஒரு சிறந்த படம் உள்ளது. தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும் கோபத்தையும் இறக்கி வைப்பது உண்டு. அதனால் என்ன பயன், ‘‘ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்டுமே தவிர, பிறரை பழி சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.’’

உங்கள் குழந்தைகள், மனைவி சக பணியாளர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நீங்கள் ஒரு கூகுள் மேப் ஆக இருங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும். இன்று பலர், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தங்கள் வசீகர வார்த்தைகளினால் வழிகாட்டுகிறார்கள். இத்தகையவர்களால் துளியும் பிரயோஜமேதுமில்லை. இக்காலத்திற்கு தேவை வார்த்தைகளினால் போதிப்பவர்கள் அல்ல, முன் மாதிரியான வாழ்க்கையினால் போதிப்பவர்களே சமூகத்திற்குத் தேவை. நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?

நீங்கள் செல்லாத பாதையில் இன்னொருவரை நடத்த முடியுமோ? கூகுள் மேப் பாதையை காண்பிப்பது மட்டுமின்றி, கூடவே அழைத்துச் சென்று உங்களுடன் பயணிக்கிறது. இறைவேதம் இதுகுறித்து தெளிவான
புரிதலைத் தருகிறது.

‘‘ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். புத்தி மதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன். துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் விலகிக் கடந்து போ.’’ (நீதி 4:11-15) நாமும் இறைவன் காட்டும் பாதையில் நடப்போம்; பிறரையும் நல்வழிபடுத்துவோம். தேவனின் கிருபைநம்முடன் இருப்பதாக.

– அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்.

The post நீங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியா? appeared first on Dinakaran.

Read Entire Article