உத்தமபாளையம்: நிலத்தகராறில் மாமனார், மருமகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ராணுவ வீரர், தாய் கைதாயினர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தர்(55). இவரது வீட்டுக்கு எதிரே வசித்து வருபவர் ராஜேந்திரன்(60). இருவரும் விவசாய தொழிலாளர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரின் வீட்டருகே உள்ள அவரது நிலத்தை ராஜேந்திரன் வாங்கியுள்ளார். தொடர்ந்து அருகில் இருந்த புறம்போக்கு நிலத்தையும் ராஜேந்திரன் பயன்படுத்தியுள்ளார். இதற்கு சுந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
ராணுவத்தில் பணிபுரிந்து வரும் ராஜேந்திரனின் மகன் பார்த்திபன்(31) விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினர். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுந்தரின் மாமனாரான காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த முத்துமாயன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், சுந்தர், அவரது மனைவி சுதா(48) ஆகியோர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சுந்தர் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிந்து ராணுவ வீரர் பார்த்திபன், தாய் விஜயாவை கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்த பார்த்திபனின் தந்தை ராஜேந்திரன் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post நிலத்தகராறில் பயங்கரம் மாமனார், மருமகன் வெட்டிக்கொலை: ராணுவ வீரர், தாய் கைது appeared first on Dinakaran.