நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து அறிய வயநாடு செல்லும் சிறப்பு குழு - நீலகிரி கலெக்டர் தகவல்

3 months ago 21

நீலகிரி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அடுத்த சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு, மழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "நீலகிரியில் இருந்து தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவினர் கேரளாவுக்கு செல்ல உள்ளனர்.

அவர்கள் வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து நேரில் சென்று அறிந்து கொள்ள உள்ளனர். நீலகிரியில் ஒருவேளை நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வதற்கும், தயார் நிலையில் இருப்பதற்கும் இந்த ஆய்வு உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

Read Entire Article