நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

1 month ago 18

விருதுநகர், செப்.29: நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: பொதுவாக நிலக்கடலையில் 48 சதவீதம் எண்ணெய் சத்தும் 26 சதவீதம் புரதச்சத்தும், உயிர்ச்சத்துக்கள், தாது உப்புகள், ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் (deoxidants) போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் வேர் முடிச்சுகள் காணப்படுவதால் மண் வளத்தை மேம்படுத்துகிறது. பயிர் சுழற்சியில் முக்கிய அங்கமாகவும் உள்ளது. நிலக்கடலை பயிருக்கு விதைத்த 40-45வது நாளில் ஹெக்டருக்கு 400 கிலோ வீதம் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத் தன்மையை பொறுத்து இட வேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சம் இடுவதால் மேல் மண் இலகுவாகிறது. சிம்புகள் எளிதில் மண்ணில் இறங்க உதவுகிறது. கால்சியம் மற்றும் கந்தகச் சத்து குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது. பருப்பின் எண்ணெய் சத்து அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது. நூற் புழுவால் ஏற்படும் நோயிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் ஜிப்சம் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்டத்தில் நிலக்கடலை விதைப் பண்ணை அமைத்துள்ள மற்றும் அமைக்க உள்ள விவசாயிகள் ஜிப்சம் இடுவதன் மூலம், விளைச்சலை அதிகரித்து தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ் appeared first on Dinakaran.

Read Entire Article