நில முறைகேடு விவகாரம்: 14 மனைகளை திருப்பித் தர சித்தராமையாவின் மனைவி முடிவு

2 months ago 25

பெங்களூரு,

கர்நாடகத்தில் சித்தராமையா (வயது 76) தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் ரூ.187 கோடியில் முறைகேடு நடைபெற்றுள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதில் பழங்குடியினர் நலத்துறை மந்திரி நாகேந்திரா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதே வழக்கில் அந்த வளர்ச்சி வாரிய தலைவரான காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடா தத்தல் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கர்நாடக அரசின் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கு வதற்குள் முதல்-மந்திரி சித்தராமையா மீதான மூடா நில முறைகேடு விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளது. இது கர்நாடக அரசியலில் கடந்த ஒரு மாதமாக புயலை கிளப்பி வருகிறது.

அதாவது மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் லே-அவுட்டில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் தாவர்சந்த் கெலாட், சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மைசூரு மாவட்ட லோக்அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு உதேசுக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து மைசூரு லோக்அயுக்தா போலீசார் முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜூன சாமி, நிலத்தின் முன்னாள் உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது கடந்த 27-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு குறித்து விசாரிக்க மைசூரு லோக்-அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு உதேஷ் 4 சிறப்பு குழுக்களை அமைத்து கடந்த 28-ந்தேதி உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், மைசூரு லோக்அயுக்தா போலீசார் அதற்கேற்ப விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த சூழலில் மூடா நில முறைகேடு வழக்கில் திடீர் திருப்பமாக முதல்-மந்திரி சித்தராமையா மீது நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். மைசூரு லோக் அயுக்தா போலீசில் பதிவானது போலவே மூடா நில முறைகேட்டில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2-வது குற்றவாளியாக அவரது மனைவி பார்வதியும், அவரது மைத்துனர் மல்லிகார்ஜூன சாமி 3-வது குற்றவாளியாகவும், நிலத்தின் முன்னாள் உரிமையாளர் தேவராஜ் 4-வது குற்றவாளியாகவும், மற்றவர்கள் 5-வது குற்றவாளியாகவும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நில முறைகேடு விவகாரத்தில், மைசூரு அதிகாரியால் தனக்கு ஒதுக்கப்பட்ட 14 மனைகளை திருப்பித் தர கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி முன்வந்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு சித்தராமையாவின் மனைவி அனுப்பிய கடிதத்தில், மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தால் எனக்கு சாதகமாக நிறைவேற்றப்பட்ட 14 மனைகளின் பத்திரங்களை ரத்து செய்து, இழப்பீட்டு மனைகளை சரணடைந்து திருப்பித் தர விரும்புகிறேன். மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்திற்கு இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article