வந்தவாசி, அக்.18: வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றிய அதிமுக செயலாளர் வி.பச்சையப்பன் தனி ஒருவராக கட்சி கொடியை ஏற்றி, அதிமுக தொடக்க விழாவை கொண்டாடியது தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றிய அதிமுக செயலாளராக வி.பச்சையப்பன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறார். ஒருங்கிணைந்த ஒன்றியமாக இருந்த தெள்ளார் மேற்கு மற்றும் கிழக்கு என பிரிக்கப்பட்டது. அப்போது கிழக்கு ஒன்றிய செயலாளராக கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தார்.
கடந்த 2012ம் ஆண்டு ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு, அவரை பிடிக்காத அதிமுக கவுன்சிலர்கள் மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் தெள்ளார் சி.சீனிவாசனை ஆதரிக்க, அதிமுக தலைமை அறிவித்த வேட்பாளரான பச்சையப்பனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பச்சையப்பனுக்கு எதிராக வாக்களித்தால் அவர் தோல்வியை தழுவினார். தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பெற வேண்டும், எதிர்ப்பாக யாரும் வரக்கூடாது என்பதற்காக தெள்ளார் சி.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் டி.கே.பி.மணி, ஒன்றிய அவைத்தலைவர் பி.முனிரத்தினம் ஆகியோருக்கு போட்டியிட வாயப்பு அளிக்காமல் பார்த்துக்கொண்ட பச்சையப்பன் தான் போட்டியிட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தோல்வியை தழுவினார். இதனால் அவரது ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான கனவு பறிபோனது.
மேலும், 2012ம் ஆண்டு முதல் தனக்கு ஆதரவான அதிமுக கவுன்சிலர்களை அடைகாப்பதுபோல் வைத்திருந்து அவர்கள் வெளிேய போகாத வகையில் பார்த்துக்கொண்டார். ஆனால், ஒன்றிய செயலாளர் பச்சையப்பனை நம்பியிருந்த 8 கவுன்சிலர்களுக்கும் எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை. எனவே, அந்த 8 நபர்களும் இவருக்கு எதிராக திரும்பினார்கள். இதனால் அவரது அலுவலகத்திற்கு செல்வதையே தவிர்த்தனர். அனைவரையும் அரவணைத்து செல்வதை விரும்பாமல் பச்சையப்பன் தொடர்ந்து தனியாக அரசியல் செய்ய நினைத்தார். இதனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இவரை சந்திப்பதை தவிர்த்து புறக்கணித்து வந்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இதையொட்டி தெள்ளார் பஜார் வீதியில் உள்ள கட்சியின் கொடிக்கம்பத்தில், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன் தனி ஒருவராக நின்று கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது, அவருடன் தெள்ளார் நகர செயலாளர் தென்றல் மட்டுமே இருந்தார். அதிமுகவின் தொடக்க விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அக்கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டாமல் புறக்கணித்த நிலையில், தனி ஆளாக நின்று ஒன்றிய செயலாளர் கட்சிக்கொடியை ஏற்றிய சம்பவத்தால் அதிமுகவின் உண்மையான தொண்டர்களை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post நிர்வாகிகள் புறக்கணிப்பால் தனி ஒருவராக அதிமுக கொடியேற்றிய ஒன்றிய செயலாளர் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி தெள்ளாரில் அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா appeared first on Dinakaran.