நிர்வாக செலவின மதிப்பீடு வழங்குவதில் ரயில்வே தாமதம்; மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை பணியில் பின்னடைவு

1 month ago 13

மதுரை: மதுரை – தூத்துக்குடி இடையே 159 கிமீ தூர ரயில் பாதை நெல்லை வழித்தடத்தில் வாஞ்சி மணியாச்சி வரை சென்று அங்கிருந்து மீளவிட்டான் வழியாக தூத்துக்குடியை சென்றடைகிறது. பஸ் பயணத்தை விட ரயில் பயணம் ஒரு மணி நேரம் கூடுதல் என்பதுடன், தூரமும் அதிகம். மேலும் இந்த வழித்தடத்தில் அதிக ரயில்கள் இயங்குவதால் கிராசிங்குகளும் அதிகம். எனவே, அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடி இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் (1999 – 2000) ரயில்வே பட்ஜெட்டில் அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி மதுரை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம், பாறைப்பட்டி, ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேலமருதூர், வாலசமுத்திரம், சில்லாநத்தம், சாமிநத்தம், தட்டப்பாறை, மீளவிட்டான் வழியாக தூத்துக்குடி ரயில் நிலையம் வரை உள்ள 143 கி.மீ.க்கு புதிய அகல ரயில்பாதை அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியது இத்திட்டம். கிடப்பில் இருந்த இத்திட்டத்தில் தற்போது மீளவிட்டானில் இருந்து மேல்மருதூர் வரை ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனாலும் மேல்மருதூர் – திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் தாமதத்தால் பணியில் தொய்வு நிலை உள்ளது. நிதி ஒதுக்கீடு, நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை – தூத்துக்குடி இடையேயான 143 கி.மீ. தூரத்தில் தூத்துக்குடி – மீளவிட்டான் வரை ஏற்கனவே ரயில் பாதை உள்ளது. அருப்புக்கோட்டை வழியாக மீளவிட்டான் – திருப்பரங்குன்றத்துக்கு சுமார் 134 கி.மீ. தூரத்தில் புதிய பாதை அமைக்க வேண்டும். மதுரை – தூத்துக்குடி இடையே 10 புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. இத்திட்டத்துக்கென மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சுமார் 840 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். இது இன்னும் முழுமை ஆகவில்லை. தூத்துக்குடியில் மட்டுமே 80 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மீளவிட்டான் – மேல்மருதூர் வரையிலான பணியை அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேல்மருதூர் – அருப்புக்கோட்டை – திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது’’ என்றார்.

இந்நிலையில், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த தகவல் ஆர்வலர் வரதன் அந்தப்பன், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ள தகவல்களின் பேரில் கூறுகையில், ‘‘மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கு தேவையான, 321 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவதற்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தினரால் நிர்வாக அனுமதி ஒரு வருடத்திற்கு முன்பாக கொடுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கு தேவையான 52 பணியாளர்களுடன் கூடிய நிலம் கையகப்படுத்தும் குழு இன்னும் உருவாக்கப்படவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பாகவே தேவையான நிர்வாக செலவினங்களுக்கான மதிப்பீடு ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்டும், ரயில்வே துறை இன்னும் மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுக்கவில்லை. இதனால் நிலம் கையகப்படுத்துதல் தாமதமாவதோடு புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

The post நிர்வாக செலவின மதிப்பீடு வழங்குவதில் ரயில்வே தாமதம்; மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை பணியில் பின்னடைவு appeared first on Dinakaran.

Read Entire Article