கோவை,
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஞானசேகர் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவத்தை விட கொடுமையானது என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"உலகப் புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒரு சீர்குலைக்கப்பட்டு, தமிழகமே தலைகுனியும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்தை விட கொடுமையானது. இதில் தி.மு.க.விற்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவது வெட்கக்கேடானது.
இதற்கு தி.மு.க.வின் தோழமை கட்சிகள் என்ன சொல்வார்கள் என தெரியவில்லை. ஆனால் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.