குரு ஒருவர் ஒருநாள் தன் பயன்பாட்டுக்காக பாத்திரம் ஒன்றை தேடினார்.முதலில் அவர் கண்டது ஒரு பளபளப்பான தங்கத்தாலான பாத்திரம். அது அவரை பார்த்து புன்னகைத்துச் சொன்னது. நான் விலைமதிப்பற்றவள்,என்னைப் பார்ப்போர் எல்லோரும் என் பளபளப்பில் மயங்குகின்றனர்.என் அழகு எல்லாவற்றையும் விஞ்சக் கூடியது. உங்களைப் போன்றோருக்கு நான் தான் ஏற்ற பாத்திரம் என்றது. குரு அமைதியாக அந்த தங்கப் பாத்திரத்தை கடந்து சென்றார்.அடுத்து ஒரு வெள்ளி பாத்திரத்தைக் கண்டார்.அது அவரிடம் பேசியது, என்னை எடுத்துச் செல்லுங்கள், நீங்கள் விரும்பிப் பருகும் திராட்சை ரசத்தை எனது கோப்பையில் ஊற்றுங்கள்.உங்கள் விருந்தினர் என்னைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.அதனால் நீங்கள் பெருமை அடைவீர்கள் என்றது. குரு அமைதியாக தேடலைத் தொடர்ந்தார்.அடுத்து ஒரு வெண்கலப் பாத்திரத்தை கண்டார். அது அகன்ற வாயுடன் ஆழமற்று இருந்தது.அது சொன்னது என்னை எடுத்துச் செல்லுங்கள். பலவகையில் உங்களுக்கு நான் பலன் தருவேன் என்றது.அதையும் கண்டு கொள்ளாது சென்றார் குரு. அடுத்து கண்களைக் கவரும் கண்ணாடிப் பாத்திரம், கவர்ச்சியாய்ப் பேசியது,உள்ளழகை அப்படியே வெளிக்காட்டும் பண்பு எனக்கு உண்டு. கவனமுடன் என்னை நீங்கள் கையாள வேண்டும். இருந்தாலும் என்னால் உங்களுக்கு பெருமை வந்து சேரும் என்றது. அதையும் பொருட்படுத்தாமல் குரு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
அடுத்து பார்த்த மரத்தாலான பாத்திரத்தையும் கடந்து சென்ற குருவின் பார்வை அங்கே ஓரத்தில் கிடந்த மண் பாத்திரத்தின் மீது விழுந்தது.அந்த பாத்திரம் உடைந்து உருக்குலைந்து கிடந்தது.ஏனோ அது குருவின் மனதைக் கவர்ந்தது. அதை எடுத்தார்,தண்ணீரை நிரப்பினார். அவர் கண்களுக்கு அதுவே அனைத்தையும் விட அழகாக தெரிந்தது. நன்றிப் பெருக்கோடு குருவைப் பார்த்தது அந்த களிமண் பாத்திரம்.அதைப் பார்த்து அன்பாகச் சொன்னார் குரு, உன்னை நான் நிரப்பியது போல பிறரை நீ நிரப்புவாயாக என்றார். ஒதுக்கப்பட்ட,ஓரங்கட்டப்பட்ட பாத்திரம் தேர்ந்தெடுக்கப்படுகிறது உயரிய பணிக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.
நம் குடும்பங்கள்,நாம் வாழும் சமூகம், பணியாற்றும் நிறுவனம், அலுவலகம் இந்த பாரம்பரிய அமைப்புகள் எல்லாம் கண்டுகொள்ளாத, அங்கீகரிக்காத, அனுமதிக்காத பல திறமைகள் நம்முள் புதைந்து கிடக்கின்றன. அத்தகைய திறமைகள் சமூக தடைகளை மீறி வெளிவந்ததால்தான் நமக்கு மின்சாரம் கிடைத்தது, தொலைபேசி கிடைத்தது, வான ஊர்தி கிடைத்தது, எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.சமூகம் நம்மை புறக்கணித்தாலும், நாமே நம்மை புறக்கணிக்கத் தேவையில்லை. அதுபோல்தான் புறக்கணிப்பு, நிராகரிப்பு போன்றவை எல்லாம் நாம் வாழ்வில் நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பாக கருத வேண்டும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச்சேர்ந்தவர் மெலினி. 17 வயதில் அவரது தொழில்முனைவு பயணம் ஆரம்பமானது. அப்போது அவர் 19 வயதான எதிர்கால கணவர் கிளிப் ஆப்ரெக்டை சந்தித்தார். இருவருமாக சேர்ந்து 2013ம் ஆண்டு கேன்வா நிறுவனத்தை துவக்கினர்.கேன்வா, மெலினி உருவாக்கிய இரண்டாவது நிறுவனம். இதற்கு முன்னால் அவர் ‘பியூஷன் புக்ஸ்’ எனும் நிறுவனத்தை துவக்கியிருந்தார்.மெலினிக்கு இணைய வடிவமைப்பில் ஆர்வம் இருந்தது, நல்ல திறனும் இருந்தது. இதன் பயனாக கல்லூரிகளில் சக மாணவர்களுக்கு இணைய வடிவமைப்பில் உதவி செய்பவராக இருந்திருக்கிறார்.
சந்தையில் இருந்த மைக்ரோசாப்ட் மென்பொருட்களும், அடோபின் சாதனங்களும் சிக்கலானதாகவும், செலவு மிக்கதாகவும் இருந்ததால், இதற்கு மாற்றாக எளிதான ஒரு தீர்வை அளிக்க விரும்பினார். இந்த எண்ணம் தான் கேன்வாவுக்கான மூல விதை. ஆனால், உடனடியாக அவர் நிறுவனத்தை துவக்கிவிடவில்லை. நடுத்தரக் குடும்ப பின்னணியைச்சேர்ந்த அவரிடம் புதிய நிறுவனத்தை துவக்க போதுமான நிதி வசதி இருக்கவில்லை. எனவே, முதல் கட்டமாக தனது எண்ணத்தை செயல்படுத்தி பார்க்கும்வகையில் பள்ளிகளுக்கான ஆண்டு புத்தகத்தை உருவாக்கித்தரும் சேவையை வழங்கும் பியூஷன் என்ற நிறுவனத்தை 2011 ஆம் ஆண்டு தொடங்கினார்.இந்த நிறுவனம் வெற்றிகரமாகவே அமைந்தது. ஒரு கட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதன் சேவையை பயன்படுத்தின. ஆனால், இதற்கு மேல் இந்தப் பிரிவில் வளர்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தார். முழுவீச்சிலான இணைய வடிவமைப்பு நிறுவனத்தை துவக்கி நடத்துவதே வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நினைத்தார்.மெலினி சற்றும் தயங்காமல் ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்று தங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
சான் பிரான்சிஸ்கோவில் சகோதரர் அறையில் மாதக்கணக்கில் தங்கி வென்ச்சர் முதலீட்டாளர்களை இடைவிடாமல் சந்தித்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வரிசையாக நூறுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து விதவிதமான நிராகரிப்புகளை மட்டுமே பதிலாக பெற்றார்.நிறுவனர்கள் காதலர்களாக இருந்தது, ஆஸ்திரேலியாவில் நிறுவனம் அமைந்திருந்தது என பல காரணங்களினால் முதலீட்டாளர்கள் பாராமுகம் காட்டினர். நிறுவனர்களுக்கு தொழில்நுட்ப பின்புலம் இல்லாததும் பாதகமான அம்சமாக அமைந்தது. ஆனால், மெலினி விடாமல் முயற்சித்துக்கொண்டே இருந்தார்.ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவில் நிதி திரட்டுவது கடினம் என்பதை உணர்தவருக்கு, முற்றிலும் எதிர்பாராத திசையில் இருந்து உதவி கிடைத்தது.அவர்கள் மாற்றி யோசித்ததும் இதற்கான காரணமாக அமைந்தது.மெலினியும், அவரது காதலரும், ஆஸ்திரேலியா அருகே ஓரிடத்தில் பல முதலீட்டாளர்கள் கூடுவதை தெரிந்து கொண்டனர். அந்த குழுவை சந்தித்து நிதி கேட்க தீர்மானித்தனர். ஆனால், அக்குழுவில் இருந்தவர்கள் அனைவரும் கைட்சர்பிங் எனச் சொல்லப்படும் தண்ணீர் சாகச விளையாட்டு பிரியர்களாக இருந்ததை அறிந்தனர்.
உடனே சாகச விளையாட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டு,சாகச விளையாட்டு பிரியர்களாக சென்று அக்குழுவினரை சந்தித்தனர். இந்தக் குழுவின் மூலம் ரிக் பேக்கர் என்பவரை சந்தித்தனர். சிட்னியைச் சார்ந்த வென்ச்சர் முதலீடு நிறுவனத்தை துவக்க இருந்த பேக்கர், இந்த இளம் ஜோடியின் ஐடியா மற்றும் முயற்சியால் கவரப்பட்டு நிதி அளிக்க முன்வந்தார். ஆனால், நிறுவன பெயரில் மட்டும் சிறிய மாற்றத்தை பரிந்துரைத்தார். எஸ் (S) எனும் இறுதி எழுத்தை கைவிட்டு ’Canva’ என வைக்குமாறு கூறினார். தொழில்நுட்பம் தெரிந்து ஒருவரை இணை நிறுவனராக சேர்க்குமாறும் கூறினார்.
இப்படிதான் கேன்வா-வின் வெற்றிக்கதை ஆரம்பமானது. நிறுவனத்திற்கு வெற்றிகரமான சேவை இருக்க வேண்டும் என முதலீட்டாளர் வலியுறுத்தியதால், மெலினி ஓராண்டு உழைத்து கேன்வாவுக்கான அடிப்படை சேவையை தயார் செய்து கேன்வா நிறுவனத்தை துவக்கினார்.கேன்வாவின் ஆரம்ப வெற்றியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் மெலினி தொடர்ந்து மேம்பட்ட அம்சங்களை அறிமுகம் செய்தார். அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியாவில் மட்டும் கவனம் செலுத்தாமல் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்தார். அதற்கேற்ப ஊழியர்கள் எண்ணிக்கையையும் உயர்த்தினார்.ஆரம்ப நிராகரிப்புகளை மீறி, கேன்வா தொடர்ந்து முதலீட்டை ஈர்த்து, தனது சந்தை மதிப்பை உயர்த்திக் கொண்டாலும், மெலினியும், அவரது கணவரும், ஆடம்பரத்தை நாடாமல் சிக்கனமான வாழ்க்கையை கடைபிடித்து வருகின்றனர். நிறுவன செயல்பாடுகளிலும் இது பிரதிபலிக்கின்றது. நிறுவனம் லாபம் ஈட்ட இதுவும் ஒரு முக்கிய காரணம். மெலினி தம்பதி தனிப்பட்ட சொத்து மதிப்பாக 8 பில்லியன் டாலருக்கு மேல் பெற்றிருந்தாலும், அதில் 30 சதவீதத்தை கேன்வா அறக்கட்டளை மூலம் நன்கொடையாக அளித்து வருகின்றனர்.உலகின் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக கருதப்படும் இணைய வடிவமைப்பு சேவை நிறுவனமான கேன்வாவை உருவாக்கிய மெலினி பெர்கின்ஸ், முதலீட்டாளர்களின்நிராகரிப்புகளால் துவண்டு போகாமல் துடிப்புடன் முன்னேறிய வெற்றிகரமான பெண் தொழில்முனைவோராக திகழ்ந்து வருகிறார்.
இவருக்கு 35 வயதுதான் ஆகிறது. அவர் துவங்கிய நிறுவனத்திற்கு இன்னமும் 10 வயது கூட ஆகவில்லை. ஆனால், இதற்குள் மெலினி ஃபோர்ப்ஸ் முதல் ஃபார்டியூன் வர்த்தக இதழ்களின் அட்டைப்பட நாயகியாக இடம்பெற்றிருக்கிறார். இதை எல்லாம் அவர் பூஜ்ஜியத்தில் இருந்து துவக்கி சம்பாதித்திருக்கிறார் என்பது மட்டும் அல்ல, அவரது புதிய நிறுவனத்திற்கு நிதி கேட்டு முதலீட்டாளர்களை அணுகிய போது நூறு முறைக்கு மேல் நிராகரிப்புகளை எதிர்கொண்ட நிலையிலும் மனம் துவண்டுவிடாமல் சாதித்திருக்கின்றார்.நிராகரிப்பு என்பது இழப்பு அல்ல, அது ஒரு வாய்ப்பு. நிராகரித்தவுடன் தலை தலைகுனிந்து கீழே பார்ப்பது தான் இழப்பு. ஆனால் தலைநிமிர்ந்து பார்த்தால் ஒரு அருமையான வாய்ப்பு நமக்காக காத்திருக்கும் என்பதுதான் மெலினி அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
The post நிராகரிப்பு என்பது வெற்றிக்கான வாய்ப்பு appeared first on Dinakaran.