நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; 1 ரன்னில் சதத்தை தவறவிட்ட ரிஷப் பண்ட்

3 weeks ago 8

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சர்பராஸ் கானுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக சர்பராஸ் கான் பந்துகளை பவுண்டரி , சிக்ஸருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சர்பராஸ் கான் சதமடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதமாகும்.

தொடர்ந்து இருவரும் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் அதிரடியாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கே.எல்.ராகுல் களம் இறங்கினார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பண்ட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 99 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியாவின் முதல் இன்னிங்சின் போது காலில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் தற்போது 2வது இன்னிங்சில் சர்பராஸ் கானுடன் இணைந்து அபாரமாக பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article