நியூ ஜெர்ஸி: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டு தீ 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 13 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது. கடும் புகை மூட்டம் காரணமாக அவ்வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்து 5,000க்கு மேற்பட்ட மக்கள் வெளியற்றப்பட்டுள்ளன.
மேலும், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து அங்கு மாநில அளவிலான அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ 50% கட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் தீயை அணைக்கும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள அதே பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார் 17 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வனப்பகுதியில் தீயை ஏற்படுத்தியதாக 19 வயதுடைய ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வனப்பகுதியில் பலகைகளை பயன்படுத்தி நெருப்பை மூட்டிவிட்டு அதை முறையாக அணைக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் அதன் காரணமாக இவ்வளவு பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
The post நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத பயங்கர காட்டுத்தீ: 13,000 ஏக்கர் அளவிற்கு பரவியதால் நெடுஞ்சாலைகள் மூடல்! appeared first on Dinakaran.