திருச்சி: நிதி வேண்டுமென்றால் சொத்து வரியை 20 சதவீதம் உயர்த்த ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் செய்வதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார். மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர் அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 15 ஆண்டு காலம், 10 ஆண்டு காலம் என ஒரே நடைமுறையில் இருந்த சொத்து வரி விதிப்புகள் எல்லாம் இன்று மறுசீரமைக்கப்பட்டு 15 முதல் 20% வரை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. வரியை உயர்த்தி வழங்கினால் தான் நிதி தர முடியும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. எனவே தான் தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. ஆண்டுக்கு 6 சதவீதம் மட்டுமே வரி உயர்வு செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் என்ற விகிதாச்சார அடிப்படையில் வரி விதிப்பு கொண்டு வரலாம் என்றும் பேரிடர் காலங்களில் அந்த வரி விதிப்பை நிறுத்தி வைக்கவும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 6 சதவீத வரிவிதிப்பு மட்டுமே இருக்க வேண்டும், வேறு எந்த வரி விதிப்புகளும் கூடாது என்று முதல்வர் கூறி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post நிதி வேண்டுமென்றால் சொத்து வரியை 20% உயர்த்த ஒன்றிய அரசு நிர்பந்தம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.