நிச்சயம் வேண்டும் லட்சியம்!

3 months ago 22

எந்த ஒரு செயல்திட்டமும் இலக்குகளோடு இருக்கும்போதுதான் அந்தச் செயல்திட்டம் வலிமை பெறுகிறது, வேகம் பெறுகிறது, உற்சாகம் பெறுகிறது. வாழ்க்கையும் அப்படித்தான்.‌ ஒரு குறிப்பிட்ட இலக்கினை லட்சியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதை அடைவதற்காக வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும்போது அந்தப் பயணம் ஆர்வமுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறுகிறது.

மெழுகு போன்ற மனம்

டீன் ஏஜ் பருவத்தில் மாணவர்கள் மனம் உருகிய மெழுகுப் பதத்தில் இருக்கும். அவர்களின் மன விருப்பப்படி அவர்கள் தங்களை ஓர் அழகிய அச்சில் வார்த்துக்கொள்ள முடியும். இந்த டீன் ஏஜ் பருவத்தில் ‘தான் வாழ்க்கையில் இப்படித்தான்’ ஆக வேண்டும், என்ற லட்சியம் உருவாகி விடுவதாக உளவியல் அறிஞர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.‌ பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் தங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.‌ பள்ளிப் பருவத்தில் மாணவர்களிடம் என்ன ஆகப்போகிறீர்கள்? என்று கேட்டால் பெரும்பாலும் டாக்டர், இன்ஜினியர் என்று சொல்வார்கள்.‌ இப்போது இந்த நிலைமை கொஞ்சம் மாறி ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று சொல்கிறார்கள். ஒரு வகுப்பில் இருக்கும் ஐம்பது மாணவர்களும் இப்படித்தான் ஒரே மாதிரியாகத் தங்கள் இலக்கினைச் சொல்கிறார்கள்.‌ அந்த ஐம்பது மாணவர்களும் அவர்கள் சொன்ன இலக்கை அடைகிறார்களா? என்று கேட்டால் இல்லை.‌ ஒரு மாணவனின் இலக்கு எப்படி அமைகிறது? மாணவனின் இலக்கை, லட்சியத்தை நிர்ணயிப்பது எது? அந்த இலக்கை அடைவது எப்படி? அதற்குத்தான் இங்கே விடை காணப் போகிறோம்.‌

‘மனம் என்பது சார்ந்ததன் வண்ணமாகும்’ என்பார்கள். அதிலும் குறிப்பாக மாணவர் மனம் எதைப் பார்க்கிறதோ அப்படியே ஆகத் துடிக்கிறது. யாரைப் பார்க்கிறார்களோ அவர்களைப் போலவே ஆக வேண்டும், என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் உருவாகிறது. ஒரு மாணவனின் வாழ்வில் சாதனை படைத்தவர்கள் குறுக்கிடும்பொழுதும் அவர்களைப் பார்க்கும் மாணவர்களுக்கு தாமும் அதுபோல சாதனை படைக்க வேண்டும், என்ற ஆசை பிறக்கிறது.‌ எனவே மாணவர்களைச் சாதனை படைத்தவர்களோடு சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இந்தச் சமூகத்திற்கும் உண்டு.

சுற்றம் சூழல்

சூழல்தான் பெரும்பாலும் ஒருவனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.‌ விவசாயப் பூமியில் படிக்கும் மாணவன் ஒருவன் தான் பெரிய ஆளாகி நிறைய நிலம் வாங்கி டிராக்டர் வைத்துக் கொண்டு விவசாயம் செய்வேன் என்று சொல்கிறான்.‌ கடலோரத்தில் வாழும் சிறுவர்கள் தங்கள் லட்சியமாக விசைப்படகு வாங்க வேண்டும் என்பதையும் பெரிய அளவில் மீன் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதையும் இலக்குகளாக வைத்துக்கொள்கிறார்கள்.‌ இது சூழல் காரணமாக இயல்பாக அவர்களுக்குள் உருவாகிறது. இதனை அவர்கள் வெளியே சொல்ல விரும்புவதில்லை, என்றாலும் அவர்கள் ஆழ்மனதில் அப்படித்தான் இலக்குகள் பதிவேறுகின்றன.

சூழல் காரணிகளைப் புறம் தள்ளிவிட்டு ஒரு மாணவனால் வேறு துறைகளில் வெற்றிபெற முடியாதா? என்று கேட்டால் நிச்சயமாக முடியும். அப்படி வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். தான் வசிக்கும் சூழலில் இருந்து மாறி வேறு ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களை அடிக்கடி சந்திக்கும்போது ஒரு மாணவன் தன்னுடைய சூழலைத் தாண்டி இலக்குகளை, லட்சியங்களை நிர்ணயிக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இப்படிச் சூழலைத் தாண்டி சாதித்த சாதனையாளர்களைச் சந்திப்பதற்கும் அவர்களோடு பழகுவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது நமது பொறுப்பு.

வாசித்தல்

சாதனை படைத்தவர்களின் வரலாறு, சரித்திரத்தில் தடம் பதித்தவர்களின் வரலாறு, மாமன்னர்களின் வரலாறு, போன்றவற்றைப் படிப்பது உயர் ரக லட்சியங்கள் உருவாக வழி வகுக்கும். மேலும், உன்னதமான எண்ணங்கள் தோன்றும். தான் இந்த நாட்டுக்காகச் சேவை செய்ய வேண்டும், இந்த நாட்டை நல்ல முறையில் வழி நடத்த வேண்டும், நாட்டு மக்களைச் சரியான திசையில் வழி நடத்த வேண்டும், போன்ற எண்ணங்கள் எல்லாம் நல்ல நூல்களைப் படிப்பதன் மூலம் மட்டுமே உருவாகின்றன. எனவே மாணவர்களை நல்ல நூல்களைப் படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

நண்பர்களைப்பற்றி வேறு கட்டுரைகளில் சொல்லியிருந்தாலும்கூட லட்சியத்தைத் தீர்மானிப்பதில் நண்பர்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. நண்பர்களின் லட்சியம் நிறைவேறுவதைப் பார்க்கும்போது, நண்பர்களே ரோல் மாடலாக மாறுகிற அதிசயம் நிகழ்கிறது. நாமும் அதேமாதிரி லட்சியம் கொண்டு வாழ வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. ஒரே கண்டிஷன், நல்ல நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

தோல்வியில் தோள் கொடுக்கும் லட்சியம்

முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொன்று இருக்கிறது, பெரிய லட்சியத்தை நோக்கிச் செல்கிறோம். உதாரணமாக ஐஏஎஸ் படிக்க வேண்டும், என்று ஆசைப்படுகிறோம். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு இறுதி வாய்ப்பு வரை சென்று வாய்ப்பு நழுவிவிடுகிறது என்றாலும் கூட, அது தோல்வியாக இருக்காது. ஏனென்றால், அந்த தேர்வுக்கான‌ தயாரிப்பு என்பது நீங்கள் எந்தத் திசையில் சென்றாலும் உங்களை வழிநடத்தும்.

படிப்படியாய் நகர்வது

உங்கள் லட்சியம் பெரிதாக இருக்கலாம். அதை நீங்கள் நேரடியாக உடனே அடைந்துவிட முடியாது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட விரும்பும் ஒருவனுக்கு முதலில் உள்ளூர் மைதானத்தில் விளையாட வாய்ப்பு கிடைப்பது என்பதே ஒரு வெற்றிதான். லட்சியத்தை அடைவதற்கான பாதை திறந்திருப்பதாகவே அது அர்த்தம். தொடர்ந்து மாவட்ட அளவிலான மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும்போது லட்சியப் பாதை இன்னும் வலிமை அடைகிறது. எனவே மாணவர்கள் லட்சியத்தை கைக்கொள்ளும்போது முதலில் சின்னச்சின்ன வெற்றிகளை உருவாக்கிக் கொள்ளவும், அதில் அடையும் வெற்றிகளை ரசிக்கவும், ருசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு லட்சியம் உருவாகிற பொழுது நம்மால் அதை அடைய முடியுமா? என்ற சந்தேகம் முதலில் வரக்கூடாது. திறமை இருப்பதால்தான் ஆசை வருவதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இன்று சாலையோரம் சைக்கிள் டயர் ஓட்டி விளையாடும் ஒருவனுக்கு விமானம் ஓட்டும் ஆசை வந்தால் அவனிடம் விமானம் ஓட்டுவதற்குத் திறமை இருப்பதாகவே அர்த்தம்.‌ அதனால் மாணவர்கள் எவ்வளவு பெரிய உயரிய லட்சியத்தை இலக்காக நிர்ணயிக்கவும் தயங்கக்கூடாது.

லட்சியமும் ஆசையும்

லட்சியத்திற்கும், ஆசைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் ஒரு வங்கியின் அதிகாரியாக ஆசைப்பட்டால் அது உங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு வேலை. ஆனால் அதே வங்கி வேலையில் இருந்து பல ஏழைகளுக்கு கடன் கொடுத்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன் என்றால் அது லட்சியம். ஆசை நிறைவேறினால்தான் லட்சியம் நிறைவேறும். லட்சியத்தை வைத்துக்கொண்டால் மட்டும் ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட முடியாது.‌ அதற்காகப் போராட வேண்டும். தினமும் லட்சியத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்று தள்ளுவண்டியில் பழம் விற்கும் இளைஞர்களின் ஆரம்ப கால லட்சியம் நிச்சயமாகத் தள்ளுவண்டியில் பழம் விற்க வேண்டும் என்பதாக இருந்திருக்காது.‌ அவர் பள்ளி வகுப்பில் படித்திருக்கும்போது கேட்டிருந்தால் நிச்சயமாகப் பெரிய அதிகாரியாக ஆவேன், என்றுதான் சொல்லி யிருப்பார்.

லட்சியத்தை நிர்ணயித்துக் கொண்ட பிறகு ஏன் அந்த லட்சியத்தை அடைய முடியவில்லை? என்று கேட்டால் அந்த லட்சியத்தில் வீரியத்தன்மை இல்லாமல் போய்விடுவதும் அதற்கான சூழல் அமையாமல் போய்விடுவதும்தான்.‌ எனவே மாணவர்கள் ஒரு குறிக்கோளை நிர்ணயிக்கும்போது தினசரி ஒரு முறையாவது அதை நினைத்துப் பார்க்க வேண்டும்.‌ அந்த லட்சியத்தை அடைந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும். தொடர்ந்து அந்த லட்சியம் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இதுவே உங்களை உங்கள் லட்சியத்துடன் ஆழமாக ஊன்றி நிற்க உதவும். இறுதியில் இலக்கை அடைய உதவும்!

(இன்னும் படிப்போம்)

The post நிச்சயம் வேண்டும் லட்சியம்! appeared first on Dinakaran.

Read Entire Article