
கவுகாத்தி,
அசாமில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சி தலைவர் கார்கே உள்ளிட்ட கட்சியினர் இன்று காலை அசாமுக்கு வருகை தந்தனர். இதன்பின்னர், காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகார கமிட்டியின் கூட்டம் உள்ளரங்கில் நடந்தது.
இந்த நிலையில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில், எழுதி வைத்து கொள்ளுங்கள். நிச்சயம் பிஸ்வா சர்மா ஜெயிலுக்கு போவார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அசாமில் இன்று நடந்த கட்சி கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
இதனை கூறுவதற்காகவே பல வழிகளை கடந்து அவர் அசாமுக்கு வந்திருக்கிறார். ஆனால், நாடு முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி பெயில் (ஜாமீன்) பெற்று வெளியே இருக்கிறார். அதனை அவர் வசதியாக மறந்து விட்டார். ராகுல்ஜி, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அசாமில், இன்றைய தினம் மகிழ்ச்சியாக பொழுதுபோக்குங்கள் என்று பதிவிட்டு உள்ளார்.
அசாமில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின்போது, வன்முறையை தூண்டி விட்டதற்காக மக்களவை தேர்தலுக்கு பின்னர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என பிஸ்வா சர்மா முன்பு எச்சரித்து இருந்தது கவனிக்கத்தக்கது.