நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை; பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: 3 நாட்களில் 14 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

2 hours ago 3

சென்னை: பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரயில்கள், கார், விமானம் மூலம் பயணம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் இன்று வரை மட்டும் சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால், சென்னையில் உள்ள சாலைகள் இன்று காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கரும்பு, மஞ்சள், காய்கறி விற்பனையும் களைக்கட்டியது.

சென்னையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இருக்கிறார்கள். இவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் இங்கு தங்கி தங்கள் மேல்படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட விசேஷ தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், நான்கு மாதங்களுக்கு முன்பே, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஒவ்வொரு ரயில்களிலும் 200க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர். பண்டிகைக்கு முன்னரும், பின்னரும் அனைத்து ரயில்களிலும் இதே நிலை தான் நீடித்து வருகிறது. பொங்கல் பண்டிகை ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. எனவே பொங்கலுக்கு முந்தைய நாள் திங்கட்கிழமை அதாவது ஜனவரி 13ம் தேதி விடுமுறை விடப்பட வேண்டும்.

இதே போல பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வகையில் ஜனவரி 17ம் தேதி(வெள்ளிக்கிழமை) விடுமுறை விட வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஏனென்றால் ஜனவரி 13 மற்றும் 17ம் தேதிகளில் விடுமுறை விட்டால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ஜனவரி 17ம் தேதி விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. நாளை ஒரு நாள் மட்டும்(13ம் தேதி) சொந்த விடுப்பு எடுத்தால், முன்னதாக 11ம் தேதி (நேற்று முன்தினம்), 12ம் தேதி (நேற்று) ஆகிய சனி, ஞாயிறு விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறை ஆகிவிடும் சூழ்நிலை உருவானது.

இதையடுத்து நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை முதல் சென்னையில் வசிப்போர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ெதாடங்கினர். இதனால் நேற்று முன்தினம் முதல் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. நேற்றும் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. இன்றும் நிறைய பேர் சொந்த ஊர்களுக்கு காலை முதல் புறப்பட்டு செல்கின்றனர். இதனால் இன்றும் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல் ஆகியிருந்தது. நிறைய பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். கூட்ட ெநரிசலை தவிர்கும் வகையில் விடப்பட்ட சிறப்பு ரயில்களும் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. மேலும் மக்கள் பஸ், கார்களிலும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை(நாளை) 21,904 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் மட்டும் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சென்றுள்ளனர். வெள்ளி, சனி 2 நாட்களில் ரயில்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விமானங்கள் மூலம் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஆம்னி பஸ் மற்றும் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் 3.5 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்றும் சென்னையில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சொந்த ஊர்களுக்கு 14 லட்சம் பேர் சென்றுள்ளனர். நாளையும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், ரயில் நிலையம், பஸ்நிலையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தை திங்கள் முதல் நாளான பொங்கல் பண்டிகையன்று விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி புத்தாடை வாங்குவதற்காக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலை மோதியது. அடுத்து, பொங்கல் பண்டிகை அன்று, அனைத்து வீடுகளிலும் கரும்பு, மஞ்சள் வைத்து கொண்டாடுவார்கள். இதனால் இன்று முதல் கரும்பு, மஞ்சள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர்.

15 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு கட்டு கோயம்ேபடு மார்க்கெட்டில் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. இதே கரும்பு ஊர்களில் ரூ.550 முதல் ரூ.600 வரை விற்கப்பட்டது. அதன்படி ஒரு கரும்பு ரூ.15 முதல் ரூ.25 வரை தரத்திற்கு ஏற்றார் போல் விற்கப்பட்டது. அதே போல் மஞ்சள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. மஞ்சள் கொத்து ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகி வருகிறது. மேலும் வாழைக் கன்று, மண்பானை, வாழை இலை, மாங்கொத்து, தோரணம், பழவகைகள், பூக்கள் உள்ளிட்ட விற்பனையும் களைக்கட்ட தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையின் முதலாம் நாள் போகிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. போகி மேளம் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை; பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: 3 நாட்களில் 14 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article