நாளை பிற்பகலுக்குள் இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கவில்ைல என்றால் ஹமாஸ் பிடியில் இருக்கும் காசா வெடித்து சிதறும்; டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை; மத்திய கிழக்கு நாடுகள் பீதி

1 week ago 5

வாஷிங்டன்: நாளை பிற்பகலுக்குள் பிணைக்கைதிகளை விடுவிக்கவில்ைல என்றால் ஹமாஸ் பிடியில் இருக்கும் காசா வெடித்து சிதறும் என்று டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகள் பீதியடைந்துள்ளன. கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தீவிரவாத தாக்குதலால், காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் இதுவரை 48,239 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1,11,676 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இஸ்ரேல் தரப்பில் 1,139 பேர் பலியானதாகவும், 200க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 251 பிணைக்கைதிகளில் இன்னும் 73 பேர் காசாவில் உள்ளனர்.

இவர்களில் 35 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தி உள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்ட பின்னர், ஹமாஸ் தரப்பில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 16 இஸ்ரேல் மக்கள், பிற நாடுகளை சேர்ந்த ஐந்து பேர் விடுவிக்கப்பட்டனர். அதேநேரம் இஸ்ரேல் தரப்பில் இருந்து சுமார் 2,000 பாலஸ்தீன மக்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் ஹமாஸ் தரப்பில் விடுவிக்கப்பட வேண்டிய மீதமுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க தாமதப்படுத்தி வருவதாகவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறி வருவதாகவும் இஸ்ரேல் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு காரணமான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போதைய சூழல்கள் குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘ஹமாசால் சிறை வைக்கப்பட்ட மீதமுள்ள பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அந்த காலக் கெடுவிற்கான காலம் முடிந்துவிட்டது. இன்னும் சிறை பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை (இந்திய நேரப்படி நாளை) நண்பகல் 12 மணிக்குள் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவில்லை என்றால், அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது.

ஹமாசின் எல்லா நகரமும் வெடித்து சிதறும். மிகவும் கடினமான நிலைப்பாட்டை எடுப்பேன். இஸ்ரேல் ராணுவம் என்ன செய்யப் போகிறது என்று என்னால் சொல்ல முடியாது. பிணைக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். ஹமாசால் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். பிணைக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று கோருகிறேன். ஒருவேளை அவ்வாறு பிணைக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், உங்களது (ஹமாஸ்) நிலைமை மோசமாக மாறிவிடும். அதைச் சொல்ல விரும்பவில்லை. காசாவின் எந்தந்த பகுதிகள் அழியும் என்பதை (செய்தியாளர்கள்) நீங்கள் பார்ப்பீர்கள். நான் என்ன சொல்கிறேன் என்பதை அப்போது ஹமாஸ் உணர்வார்கள்’ என்று காட்டமாக தெரிவித்தார்.

டிரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஹமாசின் பிடியில் இருந்து இஸ்ரேலை சேர்ந்த 3 பிணைக் கைதிகளான அலெக்சாண்டர் ட்ரூபனோவ், சாகுய் டெக்கல்-சென் மற்றும் யெய்ர் ஹார்ன் ஆகியோரை இன்று விடுவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் இஸ்ரேல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 369 பாலஸ்தீன மக்களை விடுவிக்க இஸ்ரேல் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று இஸ்ரேல் பிணைக் கைதிகளுக்கு ஈடாக 369 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

அதேநேரம் இஸ்ரேல் – காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து அடுத்த வாரம் இஸ்ரேல் அரசுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கையால், கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்த போரின் தீவிரம் மேலும் அதிகரிக்குமா? தணியுமா? என்பது மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

The post நாளை பிற்பகலுக்குள் இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கவில்ைல என்றால் ஹமாஸ் பிடியில் இருக்கும் காசா வெடித்து சிதறும்; டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை; மத்திய கிழக்கு நாடுகள் பீதி appeared first on Dinakaran.

Read Entire Article