நாளை ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கவுள்ள நிலையில் சாமி வேட்டிகள், துண்டுகள் உற்பத்தி பணிகள் தீவிரம்

2 hours ago 1

* கடந்தாண்டை விட ஆர்டர்கள் கம்மி
* கவலையில் ஆண்டிபட்டி நெசவாளர்கள்

ஆண்டிபட்டி: கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆண்டிபட்டியில் காவி வேட்டி உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் வேட்டிகளுக்கான ஆர்டர் குறைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில் நெசவுத்தொழில் அதிகம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் காட்டன் சேலை உற்பத்தி அதிக அளவு நடைபெற்று வரும். தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகளவு காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கும்,‌ வெளி மாவட்ட சந்தைகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் காட்டன் சேலை உற்பத்திகளை போலவே வெள்ளை வேட்டிகள் மற்றும் காவி வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சக்கம்பட்டி பகுதியில் காவி, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீளம் உள்ளிட்ட ஒன்பது வண்ணங்களில் சாமி வேஷ்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்பட இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழா காலங்கள் மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு மொத்தமாக ஆர்டரின் பெயரில் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் இருந்து சாமி வேட்டிகளுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வரும். இந்த நிலையில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் பிறக்க உள்ளதால், சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் பழநி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். அதற்காக உற்பத்தி செய்யும் பணியும் சக்கம்பட்டி பகுதியில் தீவிரமாக நடைபெற்றது.

ஐய்யப்பனுக்கு கருப்பு, நீலம், காவி வேட்டிகளும், முருகனுக்கு பச்சை, சிமெண்டு கலர் வேட்டிகளும், அம்மனுக்கு மஞ்சள், சிவப்பு வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வேட்டிகள் ஈரோடு ஜவுளி மார்க்கெட் மூலம் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு, பள்ளிம்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாமி வேட்டிகளின் உற்பத்தி அதிகரித்த காரணத்தால் சக்கம்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் சாமி வேட்டிகளுக்கான ஆர்டர்கள் இந்த ஆண்டு மிக மிக குறைந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக எப்போதும் கேரள மாநிலம் முழுவதும் ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் தான் சாமி வேட்டிகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கேரள மாநிலத்தில் இருந்து வரும் ஆர்டர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சக்கம்பட்டி காவி வேட்டி நெசவாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நாளை கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு காவி வேட்டிகளின் வியாபாரம் எதிர்பார்த்த அளவு கை கொடுக்கவில்லை என்று நெசவாளர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் விற்பனையும் மந்தம்
சக்கம்பட்டி பகுதியில் காட்டன் சேலைகள் விற்பனை போலவே வேட்டிகளையும் ஆன்லைனில் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆன்லைனில் விற்பனை செய்பவர்களும் போதிய விற்பனை இல்லாததால் புலம்பி வருகின்றனர்.

The post நாளை ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கவுள்ள நிலையில் சாமி வேட்டிகள், துண்டுகள் உற்பத்தி பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article