
.சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை இரவு தமிழகம் வருகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உள்பட பல்வேறு தரப்பினரை அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை இரவு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மத்திய மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை இரவு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கும் அமித்ஷாவை நள்ளிரவில் மூத்த அ.தி.மு.க. தலைவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி பற்றி இருதரப்பும் விவாதிக்க உள்ளதாகவும், அதன்பிறகு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றிய பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே 5 நாட்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே உள்ளனர். இதன்படி செங்கோட்டையன், தங்கமணி தவிர மற்ற அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சென்னையிலேயே உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் திடீரென்று கடந்த மாதம் 25ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, எடப்பாடி பழனிச்சாமி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர்
இந்த பேச்சுவார்த்தை தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைப்பதற்கான தொடக்கப்புள்ளியாக பார்க்கப்பட்டது. ஆனாலும் இந்த சந்திப்பு கூட்டணிக்கான அச்சாரமா? என்பது பற்றி எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக பதிலளிக்க மறுத்துவிட்டார். மக்கள் பிரச்சனைகளுக்காக அமித்ஷாவை சந்தித்ததாக அவர் கூறினார். இதற்கிடையே தான் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் அமையும் என்பதையும் உறுதியாகி உள்ளது.
முன்னதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் பா.ஜ.க. மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கூறியதால் பா.ஜ.க. மேலிடம் இந்த நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாகும் என்று கூறப்படுகிறது.