நாமக்கல்: நாமக்கல்லில் ரூ.131.36 கோடியில் திட்டப்பணிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொள்கிறார். இதற்காக கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு நேற்று இரவு அவர், நாமக்கல் வந்தார். அவருக்கு நாமக்கல் மாவட்ட எல்லையில், எழுச்சி மிகு வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நாமக்கல் சுற்றுலா மாளிகை சென்று ஓய்வு எடுத்தார். இன்று காலை முதல் நிகழ்ச்சியாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில், நாமக்கல் மாவடத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, மாவட்ட விளையாட்டரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 139 பணிகளுக்கு ரூ.87.38 கோடியில் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.10.80 கோடியில் முடிவடைந்துள்ள 36 திட்டப்பணிகளை திறந்து வைத்து பேசினார். பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில், 2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி, மாதேஸ்வரன் எம்பி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் உமா, மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, ஈஸ்வரன், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் எமஎல்ஏவுமான கே.எஸ். மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, நாமக்கல் மகால் மண்டபத்தில் திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
The post நாமக்கல்லில் இன்று நடந்த விழாவில் ரூ.131.36 கோடியில் திட்டப்பணிகளை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.