நாமக்கல் ரயில்வே கூட்ஷெட்டை 12 மணி நேரம் செயல்பட நடவடிக்கை

2 months ago 20

நாமக்கல், செப்.30: நாமக்கல் ரயில்வே கூட்ஷெட்டை 12 மணி நேரம் மட்டும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கவேண்டும் என நாமக்கல் எம்பி, தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:நாமக்கல் பகுதியில் கோழிப்பண்னை தொழில் முக்கிய தொழிலாக இருக்கிறது.

கோழிப்பண்ணைகளுக்கு தேவையான, கோழித்தீவன மூலப்பொருட்கள் பீகார் மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல் கொண்டு வரப்படுகிறது. நாமக்கல் கூட்ஷெட்டில் இருந்து மூலப்பொருட்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கூட்ஷெட் 24 மணி நேரமும் இயங்கவேண்டும் என்ற வகையில் ரயில்வேத்துறையின் உத்தரவு இருக்கிறது.

இது கூட்ஷெட்டில் இருந்து லோடுகளை இறக்குவதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. கூட்ஷெட் பகுதியில் போதுமான சாலை வசதிகள், மின் விளக்குள் வசதிகள் இல்லை. மேலும் கூட்ஷெட் தொழிலாளர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தான் பணிக்கு வந்து செல்வார்கள். சரக்கு ரயில்களில் வணிகரீதியிலான பொருட்கள் கொண்டுவரப்படுவதில்லை. கோழித்தீவன மூலப்பொருட்கள் தான் கொண்டு வரப்படுகிறது. 24 மணி நேரமும் கூட்ஷெட் இயங்கவேண்டும் என்பதால், சரக்கு ரயில்களில் வெளி மாநிலங்களில் இருந்து லோடு கொண்டு வரும் கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

நாமக்கல் பகுதியில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி ஆகிய அமைப்புகள், கூட்ஷெட் இயங்கும் நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கூட்ஷெட்டைபோல, நாமக்கல் கூட்ஷெட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் மட்டும் செயல்படும் வகையில் மாற்றி அமைத்து கொடுக்கவேண்டும். இது கோழிப்பண்ணை தொழிலுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு மாதேஸ்வரன் எம்பி தெரிவித்துள்ளார்.

The post நாமக்கல் ரயில்வே கூட்ஷெட்டை 12 மணி நேரம் செயல்பட நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article