நாமக்கல்: டீக்கடையில் வெடித்துச் சிதறியது என்ன? - போலீசார் விளக்கம்

1 week ago 5

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த டீக்கடையில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. டீக்கடையில் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம் திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் புரூஸ் கபே என்ற டீக்கடையை கவிக்கண்ணன் என்பவர் கடந்த மூன்று மாதமாக நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று (15.02.2025) இரவு சுமார் 10.00 மணியளவில் தனது கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று (16.02.2025) அதிகாலை சுமார் 04.00 மணியளவில் இக்கடையில் தீ விபத்து ஏற்ப்பட்டது. தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய தடய அறிவியல் உதவி இயக்குநர் மூலமாக விசாரனை செய்ததில், தீயானது கடையில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டருடன் இணைத்து வைக்கப்பட்டிருந்த லப்பர் குழாயில் ஏற்பட்ட கசிவின் மூலமாக கேஸ் வெளியேறி, கடையில் ஜன்னல் ஏதும் இல்லாததால் கடை முழுவதும் கேஸ் நிரம்பி, மேற்படி கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்சார கசிவு மூலமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.

மேலும் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read Entire Article