திருவள்ளூர், மார்ச் 6: திருவள்ளூர் ஜே.என்.சாலையில் ‘கேக் வேர்ல்ட்’ எனும் கடையை கடந்த 4 ஆண்டுகளாக உமாகாந்த் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சேலை ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், வழக்கறிஞரும், அதிமுக பிரமுகருமான ராஜேஷ் என்பவர் அந்த கடையில் கேக் வாங்கிக்கொண்டு கூகுள் பே மூலம் பணம் அனுப்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால் கூகுள் பே சரியாக வேலை செய்யவில்லை, வீட்டுக்குச் சென்று பின்னர் அனுப்புவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் அவர் பணம் அனுப்பவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் அதே கடையில் கேக் கேட்டு உரிமையாளர் உமாகாந்தை ராஜேஷ் மிரட்டியுள்ளார். அதற்கு, பணம் கொடுக்காமல் கேக் தர முடியாது என உரிமையாளர் உமாகாந்த் கூறியுள்ளார்.
இதனால் நான்கு பேருடன் கடைக்குள் புகுந்து கடையில் இருந்த உரிமையாளர் உமாகாந்த் மற்றும் அவரது நண்பர், கடையில் பணிபுரியில் பெண் ஆகியோரை மிரட்டியதுடன் கடையில் இருந்த கம்ப்யூட்டர், கண்ணாடி பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு, கல்லாப்பெட்டியையும் அடித்து நொறுக்கினர்.
மேலும் கடையில் இருந்தவர்களை தாக்கியதுடன், ‘‘இனிவரும் காலங்களில் நான் கேட்கும்போது இலவசமாக கேக் கொடுக்கவில்லை என்றால் இந்த இடத்தில் கடை நடத்த முடியாது, உன்னை கொன்று விடுவேன்’’ என மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையை அந்த கும்பல் அடித்து நொறுக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கேக் கடையின் உரிமையாளர் உமாகாந்த் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ராஜேஷ் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி தற்போதுதான் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நான்கு பேர் கும்பலுடன் வந்து அராஜகம் ஓசியில் கேக் தராததால் கடையை அடித்து நொறுக்கிய அதிமுக பிரமுகர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.