
சேலம்,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 'அட்டகத்தி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து, 'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். அதன்படி ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்த சங்கராந்திக்கு வஸ்துன்னம் படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சேலத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், க.பெ.ரணசிங்கம் படம் உண்மை கதை என்பதால் அப்படத்திற்கு மிகப்பெரிய தாக்கம் கிடைத்துள்ளதாக கூறினார். மேலும் 'வடசென்னை, காக்கா முட்டை, தர்மதுரை' உள்ளிட்ட படத்தின் அனுபவங்கள் மற்றும் தனக்கு பிடித்த பாடல்கள், டயலாக் உள்ளிட்டவைகளை பகிர்ந்து கொண்டார்.
மேலும் நிகழ்ச்சியின் போது ரசிகர் ஒருவர், நீங்கள் இப்போது இருக்கும் கலர் ஒரிஜினலா இல்லை படத்தில் இருக்கும் கலர் ஒரிஜினலா? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நான் வெள்ளையாக இல்லை நம்ம ஊரு கலர் மாநிறம் தான், அதுதான் அழகு என்று கூறினார். மேலும் விரைவில் 'வடசென்னை 2' படம் தொடங்கும் என்றும், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் கூறினார்.