
கோவை,
தமிழக மின்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இதைத்தொடர்ந்து அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. செப்டம்பர் 29-ந் தேதி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார்.
இதையே காரணமாக வைத்து அமலாக்கத்துறை அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாடியது. வழக்கு விசாரணையின்போது, செந்தில்பாலாஜி ஜாமீனில் வெளியே இருக்க விரும்புகிறாரா? அல்லது அமைச்சர் பதவியில் தொடர விரும்புகிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்புக்கு காட்டமாக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த நெருக்கடி காரணமாக செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் பலரும் கொண்டாடினர். மேலும் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஊஞ்சலில் இருப்பது போன்ற ஸ்டைலில் செந்தில் பாலாஜியின் படத்தையும், நான் யானை அல்ல... குதிரை டக்குனு எழுவேன்... என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. செந்தில் பாலாஜி விரைவில் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பார் என்பதை எதிர்பார்க்கின்ற வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.