
பாலிவுட் முன்னணி நடிகையாக திகழும் கங்கனா ரனாவத், தமிழில் 'தாம்தூம்', 'சந்திரமுகி-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அரசியலில் களமிறங்கி தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத் தனது சினிமா அனுபவம் குறித்து மனம் திறந்தார். அப்போது, அவர், ''நான் அரசியலை ரசிக்கிறேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் அது ஒரு சமூக சேவை. மக்களுக்கு சேவை செய்ய நான் நினைத்தது இல்லை. ஆனால் இப்போது அது நடக்கிறது. பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தொகுதி மக்கள் என்னிடம் வருகிறார்கள். அரசு கவனிக்க வேண்டிய பிரச்சினை என்றாலும், உங்கள் பணத்தை கொண்டு செய்யுங்கள் என்கிறார்கள். இதெல்லாம் வியப்பாக இருக்கிறது'', என்றார்.
'பிரதமராக ஆசைப்படுகிறீர்களா' என்ற கேள்விக்கு, ''அதற்கு நான் தகுதியானவள் அல்ல. ஏனென்றால் சமூகப் பணி எனக்கு பின்னணியாக இருந்ததில்லை. நான் மிகவும் சுயநலமான வாழ்க்கையை வாழ்ந்தேன். எனவே அப்படி நினைப்பதே கூடாது'', என்று பதிலளித்தார்.