சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.
முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சுமாரான பார்மில் இருக்கிறார்கள். அதனால் இம்முறை இந்திய அணியை கண்டிப்பாக ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியின் பார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளதாகவும், டெஸ்ட் போட்டிகளில் 5 வருடத்தில் 3 சதங்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரருக்கு உகந்ததாக இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். எனவே விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்
இது குறித்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்பாக தலைமை பயிற்சியாளரான கம்பீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கம்பீர், "இந்திய அணியை பற்றி பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்?. விராட் கோலி, ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் அசத்துவார்கள். பாண்டிங் ஆஸ்திரேலிய அணி குறித்து யோசித்தால் போதும்" என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் கம்பீரின் இந்த கருத்துக்கு பாண்டிங் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட், ரோகித் ஆகியோரை பற்றி ஜோடியாக நான் குறிப்பிட்டுள்ளேனா என்பது தெரியவில்லை. முந்தைய நாளில் நான் விராட் கோலியின் தற்போதைய பார்ம் கவலையை கொடுப்பதாக நான் கூறியிருந்தேன். கடந்த 5 வருடங்களில் விராட் கோலி வெளிப்படுத்திய செயல்பாடுகளை பற்றி படித்தேன். எனவே அதை மிகவும் தெளிவுடன் சொன்னேன்.
அவர் கடந்த 5 வருடங்களில் 3 சதங்கள் (டெஸ்ட் போட்டிகளில்) மட்டுமே அடித்துள்ளார் என்று நினைக்கிறேன். இந்தியாவில் அவருடைய சராசரி 90 லிருந்து 30 என்றளவில் குறைந்துள்ளது. எனவே அது கவலைக்குரிய விஷயம் என்று கூறினேன். இதைப் பற்றி விராட் கோலியிடம் கேட்டால் அவரும் கவலைக்குரியது என்றுதான் சொல்வார். ஆனால் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவதை விரும்பும் விராட் கோலி இங்கே நல்ல சாதனைகளை வைத்துள்ளார். எனவே அவர் பார்முக்கு திரும்ப இதுவே நல்ல வாய்ப்பு என்று நான் கூறியிருந்தேன்.
ஆனால் கம்பீர் நான் சொன்ன கருத்தின் இரண்டாவது பகுதியை பற்றி பேசவில்லை. நியூசிலாந்திடம் சந்தித்த தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிரடியாக பேசினார். அப்படி அதிரடியாக பேசுவதில் எங்களுக்கும் கொஞ்சம் வரலாறு இருக்கிறது. ஆனால் கம்பீர் இந்த வாய்ப்பை எடுத்துக்கொண்டு என் மீது வெறுப்பை வீசியுள்ளார்" என்று கூறினார்.