ராவல்பிண்டி,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளில் முறையே இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 68.2 ஓவர்களில் 267 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேமி சுமித் 89 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 6 விக்கெட்டுகளும், நோமன் அலி 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 344 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 134 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரெஹான் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 77 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 2வது இன்னிங்சில் 37.2 ஓவர்களில் 112 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 36 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 3.1 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது.
முன்னதாக இந்தப் போட்டியின் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்சில் 10வது இடத்தில் களமிறங்கிய சஜித் கான் அதிரடியாக விளையாடினார். அப்போது இங்கிலாந்து வீரர் ரெஹன் அகமது வீசிய பந்தை எதிர்கொண்ட அவர் சரியாக அடிக்கவில்லை. துரதிஷ்டவசமாக அந்த பந்து அவருடைய கன்னத்தில் பட்டு பெரிய காயத்தை ஏற்படுத்தியது. அந்த இடத்தில் ரத்தமும் வந்து அவருடைய ஜெர்சியில் சொட்ட சொட்ட விழுந்தது.
உடனடியாக பாகிஸ்தான் அணி மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து அவருடைய காயத்திற்கு முதலுதவி செய்தனர். அதை எடுத்துக்கொண்ட சஜித் கான் களத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அர்பணிப்புடன் நாட்டுக்காக வெறியுடன் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி 4 சிக்சருடன் 48 ரன்கள் அடித்தார். மேலும் பந்துவீச்சில் அசத்திய அவர் இந்த தொடரின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் காயத்துடன் விளையாடியது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு:- "2 தையல்கள் போட்டுள்ளேன். நாட்டுக்காக விளையாடும்போது இது போன்ற விஷயங்கள் பெரிய விஷயமல்ல. அணிக்கு நான் தேவைப்படுகிறேன். உள்ளூரில் நான் சில அரை சதங்கள் அடித்துள்ளேன். எனவே சர்வதேச கிரிக்கெட்டில் செட்டிலாக இருக்கும் எங்கள் பேட்ஸ்மேனுக்கு தொடர்ந்து எதிர்ப்புறம் இருந்து உதவ வேண்டியது என்னுடைய கடமை" என்று கூறினார்.