நாமக்கல்: நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பொம்மைக்குட்டைமேடு அருகே தாளம்பாடியை சேர்ந்தவர் செல்லம்மாள்(85). வயது மூப்பின் காரணமாக, நேற்று முன்தினம் இரவு இறந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் வெடிப்பதற்காக பரமத்திவேலூர் அருகே கொந்தளத்தை சேர்ந்த நகுல்ராஜ்(45), நண்பர் செல்வத்தின் காரில், சின்னதாராபுரம் கன்னிவாடியில் உள்ள ஒரு வெடிமருந்து கடையில், 15 நாட்டு வெடி சரம் வாங்கி வந்தார்.
கொளக்காட்டுப்புதூரை சேர்ந்த அரவிந்த்(28) காரை ஓட்டி வந்தார். தாளம்பாடியில், நேற்று மதியம் 12 மணியளவில், துக்க வீட்டின் அருகே காரை நிறுத்தி, ஒரு மரத்தில் நாட்டு வெடி சரத்தை கட்டி தீப்பற்ற வைத்தனர். இதில் வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பொறி கார் டிக்கியில் விழுந்தது. இதனால் காரில் இருந்த நாட்டு வெடிகள் சரமாரியாக வெடித்துச் சிதறியது.
இதில் டீசல் டேங்கில் தீப்பொறி விழுந்து கார் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதை கண்டு துக்க வீட்டிற்கு வந்திருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது. இந்த வெடி விபத்தில் காரின் உதிரி பாகங்கள் சுமார் 20 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு சிதறிக் கிடந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
The post நாட்டு வெடிகளுடன் வெடித்து சிதறிய கார் appeared first on Dinakaran.