புதுடெல்லி,
நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சரிசெய்யும் சிகிச்சைகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் தொடங்கி நடந்தது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவரது இதயத்தில் ரத்தநாளத்தில் 'ஸ்டென்ட்' வைக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது ரஜினிகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென திரை, அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ஈட்டி வைத்திருக்கும் நாட்டு மக்களின் நல்லன்பு அவரைப் பத்திரமாய்ப் பாதுகாக்கும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ரஜினிகாந்த் சீராகத் தேறிவருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது. மருத்துவ மொழியின் நல்ல வார்த்தைகள் நம்பிக்கை தருகின்றன. நாட்டின் மருத்துவக் கட்டமைப்பும், சர்வதேசத் தரத்தில் இயங்கும் மருத்துவர்களின் மேதைமையும் ரஜினியை நிச்சயம் மீட்டெடுக்கும்.
அவர் ஈட்டி வைத்திருக்கும் நாட்டு மக்களின் நல்லன்பு அவரைப் பத்திரமாய்ப் பாதுகாக்கும். விரைவில் குணமுற்று வீடுதிரும்ப வாழ்த்துகிறேன். நீங்களும் வாழ்த்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.