இம்பால் : நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைகோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற ஒன்றிய வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா ஒரு துடிப்பான விண்வெளி சக்தியாக மாறி வருவதாகவும், 2040ம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்கும் என்றும் கூறினார்.
34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்கள் இந்தியாவில் இருந்து ஏவப்பட்டு, புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் 7000 கிமீ கடற்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி உள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவின் எல்லைப் பகுதிகளை 10 செயற்கைகோள்கள் மூலம் கண்காணித்து வருவதாகவும் கூறினார். நாட்டின் வடபகுதியை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்த அவர், டிரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் இல்லாமல் இவற்றை சாத்தியப்படுத்த முடியாது என்றும் கூறினார்.
The post நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைகோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ appeared first on Dinakaran.