நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100 சதவீதம் முடிவடைய உள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

1 day ago 1

டெல்லி: ஜம்மு காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேநே்திர மோடி, நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100%-ஐ எட்டி இருப்பதாகக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர், கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய ரெயில் நிலையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “2025-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை 1000 கிலோமீட்டருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது.

டெல்லியில் அண்மையில் நமோ பாரத் ரயில் சேவையும், டெல்லி மெட்ரோ ரயில் திட்டங்களும் தொடங்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு பிராந்தியங்களுக்கான நவீன போக்குவரத்து இணைப்பில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அனைவரும் ஒன்றிணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் வளர்ச்சியைடந்த இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்க இவை உதவுகின்றன. இத்தகைய முன்னேற்றங்களுக்காக நாட்டின் அனைத்து குடிமக்களும் பாராட்டுக்கு உரியவர்கள். அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு போக்குவரத்திற்கான வழித்தடம் போன்ற நவீன ரயில் கட்டமைப்பு பணிகள் விரைவாக நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு வழித்தடங்கள் வழக்கமான தடங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்திடும். அதிவேக ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவிடும். இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் ரயில்வே துறை மேம்பாடு அடைந்து வருகிறது. மெட்ரோவுக்கும் இதர ரயில் போக்குவரத்துக்கும் தேவையான நவீன ரயில்பெட்டிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் சூரிய மின் உற்பத்திக்கான தகடுகள் நிறுவப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ என்ற அடிப்படையில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் ரயில்வே துறையில் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. கடந்த பத்தாண்டுகளில், லட்சக்கணக்கான இளைஞர்கள் ரயில்வே துறையில் நிரந்தரப் பணிகளைப் பெற்றுள்ளனர்.

புதிய ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் மூலப்பொருட்களுக்கான தேவை, பிற துறைகளிலும் அதிக வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. நாட்டின் முதலாவது விரைவுசக்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. ரயில்வே போக்குவரத்து கட்டமைப்பு விரிவடைவதால், ஜம்மு, காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், லே-லடாக் போன்ற பகுதிகளுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய பிரிவுகள், தலைமையகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில்பாதை மூலம் ரயில்வே உள்கட்டமைப்பில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமான செனாப் பாலம் லே-லடாக் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரயில் போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது. இந்த மேம்பாலம் பிற பகுதிகளுடன் இப்பகுதியை இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

நாட்டின் முதலாவது கேபிள் அடிப்படையிலான ரயில்வே பாலமான அஞ்சி காட் பாலமும், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். செனாப் பாலமும், அஞ்சி காட் பாலமும் இந்த மண்டலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும், வளத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும். பொறியியல் துறையின் இணையற்ற எடுத்துக்காட்டுகளாக அவை அமைந்துள்ளன. ஒடிசா மாநிலம் ஏராளமான இயற்கை வளங்களையும், பெரிய கடற்கரையையும் கொண்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்திற்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. ரூ. 70,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல ரயில்வே திட்டங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏழு விரைவு சக்தி சரக்குப் போக்குவரத்துக்கான முனையங்களை நிறுவுவதுடன், அவை வர்த்தகம் தொழில்துறையை மேம்படுத்துகின்றன. ஒடிசாவில் ராயகடா ரயில்வே பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இது அம்மாநிலத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் மேம்படுத்தும். ஒடிசா மாநிலத்தில் தென்பகுதியில் குறிப்பாக பழங்குடியின குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகள் மேம்படும். தெலங்கானாவில் சார்லபள்ளியில் புதிய ரயல் முனையம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வெளிவட்டச் சாலையை இணைப்பதன் மூலம் மண்டல வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான அதன் திறன் இனி அதிகரிக்கும். நிலையத்தின் நடைமேடைகள், மின்தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகள், சூரிய சக்தி பயன்பாடு உள்ளிட்ட நவீன வசதிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு முன்னோக்கிய படியாகும். இந்த புதிய முனையம் செகந்திராபாத், ஹைதராபாத், கச்சிகுடாவில் தற்போதுள்ள ரயில் நிலையங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். மக்களுக்கு பயணத்தை மிகவும் வசதியானதாக மாற்றும். இத்தகைய திட்டங்கள் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமின்றி, இந்தியாவின் விரிவான உள்கட்டமைப்பு இலக்குகளுடன் இணைந்து, எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கிறது. விரைவுச் சாலைகள், நீர்வழி போக்குவரத்துகள், மெட்ரோ கட்டமைப்புகள் உள்ளிட்ட மிகப்பெரிய உள்கட்டமைப்பு விரிவாக்க நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014-ம் ஆண்டில் 74-ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 150-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 5 நகரங்களில் இருந்து 21 நகரங்களுக்கு மெட்ரோ சேவைகள் விரிவடைந்துள்ளன. இந்தத் திட்டங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாகும். நம்பிக்கை தரும் வகையில் தற்போது நாட்டின் வளர்ச்சி உள்ளது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார். மத்திய ரயில்வே, தகவல், ஒளிபரப்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர், பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அமைச்சர் வி.சோமன்னா, இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், ஒடிசா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, தெலங்கானா ஆளுநர் ஹரிபாபு கம்பம்பதி, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

The post நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100 சதவீதம் முடிவடைய உள்ளது: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article