சென்னை: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தேர்வில் பங்கேற்க நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளனர். தேசிய தேர்வு முகமை (என். டி. ஏ) கடந்த ஏப்ரல்30ம் தேதி நீட் 2025 க்கான சேர்க்கை அட்டையையும், தேர்வு நாளுக்கான வழிகாட்டுதல்களையும் பரிந்துரைகளையும் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மாணவ மாணவியர் தங்களை பதிவு செய்தனர். கடந்த வாரம் ஹால்டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.
இதையடுத்து தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி இன்று மதியம் நீட் தேர்வு நாடு முழுவதும் தொடங்குகிறது. இந்த தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு மாணவ மாணவியர் விடை அளிக்க வேண்டும். விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடங்களில் இருந்து தலா 90 கட்டாய கேள்விகள் இடம் பெறும். தேர்வு 3 மணி நேரம் நடக்கும். நாடு முழுவதும் 5000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அமைத்துள்ளது. மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கினாலும், காலை 11 மணிக்கே மாணவ மாணவியர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும். 11 மணியில் இருந்து தேர்வு மைய வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு தேர்வு அறைக்கு 1மணியில் இருந்து 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 1.45 மணிக்கு விடைத்தாள் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும். அதில் மாணவர்கள் முகப்பு பக்கத்தில் அவர்களின் விவரங்களை எழுத வேண்டும். 2 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். மாலை 5 மணிக்கு தேர்வு முடிந்துவிடும். தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர் தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்தபடி தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு மையங்களுக்கு எடுத்து வரக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் தேனி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், மயிலாடுதுறை ராணிப்பேட்டை, தென்காசி மாவட்டங்கள் தவிர 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில், 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீட் 2025 தேர்வு நாளில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு நடக்கும் நாளில் முன்கூட்டியே மையத்திற்கு வர வேண்டும், அதாவது 11:00 மணிக்கு தேர்வு நடக்கும் வளாகத்துக்கள் வந்துவிட வேண்டும். பிறகு எந்த மாணவர்களும் மையத்திற்குள் நுழைய முடியாது. எந்தவொரு மாணவரும் தேர்வு முடிப்பதற்கு முன்பு தேர்வு அறையை விட்டு வெளியேறக்கூடாது. தேர்வர்கள் குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்பே தேர்வு நடைபெறும் இடத்தின் இருப்பிடத்தை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் அவர்கள் தேர்வு நாளில் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையின் புதுப்பிக்கப்பட்ட நகலை மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.
மாணவ மாணவியர் பின்வரும் பொருட்களை மட்டுமே தேர்வு இடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்:
- ஒரு தனிப்பட்ட மற்றும் வெளிப்படையான தண்ணீர் பாட்டில்.
- விண்ணப்பப் படிவத்தில் சமர்ப்பிக்கப்பட்டவற்றுக்கு சமமான கூடுதல் புகைப்படங்கள், உதவி வாரியத்தில் இணைக்கப்பட வேண்டும்.
- மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் தகவல் செய்திக்குறிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள பிற பொருட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உடமைகளை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லக்கூடாது.
- தனிப்பட்ட பொருட்களின் பராமரிப்புக்கு பரிசோதனையின் அதிகாரிகள் பொறுப்பேற்க மாட்டார்கள், மேலும் பொருட்களைப் பாதுகாக்க மையத்தில் எந்த நிறுவலும் இருக்காது.
- தேர்வின் போது அனைத்து மாணவ மாணவியரும் சிசிடிவி கண்காணிப்பில் இருப்பார்கள்.
- மேற்பார்வையாளர்கள் இல்லாத நிலையில் சேர்க்கை அட்டையில் கையெழுத்திட வேண்டாம்.
- சேர்க்கை அட்டையில் அல்லது நீட் 2025 தகவல் புல்லட்டின் குறிப்பிடப்பட்டுள்ளபடி தடைசெய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் வைத்திருக்க வேண்டாம்.
- மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்களே எடுத்துக் கொள்ள வேண்டாம்.
- தேர்வு அறையில் அமர்ந்திருக்கும் மற்ற மாணவர்களுடன் பேச வேண்டாம்.
- உங்கள் பட்டியல் எண்ணுக்கு ஒதுக்கப்படாத எந்த இருக்கையையும் எடுக்க வேண்டாம்.
இவ்வாறு தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இன்று காலை 10 மணி முதலே மாணவ மாணவியர் தேர்வு வளாங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்களை கடுமையான சோதனைக்கு பிறகு வளாகத்துக்குள் அதிகாரிகள் அனுமதித்தனர்.
The post நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய அளவிலான நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.