திருமயம்: காந்தி பிறந்த மண்ணில் இருந்து வந்திருக்கிறோம் என கூறும் பாஜ, இந்தியா முழுவதும் மது விலக்கு கொண்டு வருமா? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விசிக மது ஒழிப்பு மாநாட்டை திமுக அரசு ஆதரித்து தான் திமுகவை சேர்ந்த அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மது ஒழிப்பு என்பது இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும். இதனை இந்தியா முழுவதும் கொண்டு வரும் போது தமிழகத்தில் மது ஒழிப்பு கொண்டு வருவதில் எந்த விதமான தயக்கமும் எங்களுக்கு கிடையாது. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் மது விலக்கை நாம் கொண்டு வந்து விட முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா அங்கெல்லாம் மதுவை வைத்துவிட்டு தமிழ்நாட்டில் மட்டும் மதுவை ஒழிப்பது சாத்தியமில்லாதது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வந்தால் அண்டை மாநிலங்களில் இருந்து மதுவை வாங்கி வந்து குடிப்பார்கள். இல்லையென்றால் கள்ளச்சாராயம் போன்றவை பெருகிவிடும். இந்தியா முழுவதும் தற்போது பாஜ தானே ஆட்சி செய்கிறது. மேலும் அவர்கள் காந்தி பிறந்த மண்ணில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொல்லுகின்றனர். எனவே நீங்கள் மது ஒழிப்பை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு ஆதரவையும் தருவார். இவ்வாறு அவர் கூறினார்.
The post நாடு முழுவதும் மது விலக்கை பாஜ அரசு கொண்டு வருமா? அமைச்சர் ரகுபதி கேள்வி appeared first on Dinakaran.