நாடு முழுவதும் தொடரும் ரயில் விபத்துகள் காரணம் என்ன? சிக்னல், இயக்க பிரிவுகளில் 50% காலியிடம்: 18 ரயில்வே மண்டலங்களில் 4 பேர் வேலையை ஒருவர் பார்க்கும் அவல நிலை

3 weeks ago 4

* 2023-24ல் மட்டும் 313 பயணிகள் பலி, 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம், கடந்த 10 ஆண்டுகளில் 638 விபத்துகள், 748 பேர் பலி, 1500க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வேத்துறை விளங்கி வருகிறது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் வகையில் 1.06 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே வழித்தடம் இருக்கிறது. இந்த வழித்தடங்களில் 97 சதவீதத்தை மின்வழித்தடமாக ரயில்வே நிர்வாகம் மாற்றியுள்ளது. இதன்மூலம் தற்போது நாடு முழுவதும் பாசஞ்சர் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், மெயில், சதாப்தி, வந்தே பாரத் என பல பெயர்களில் தினமும் சுமார் 13,500 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோக சரக்கு போக்குவரத்திற்கு முக்கிய கேந்திரமாக ரயில்வே விளங்கி வருகிறது.

அந்தவகையில் தினமும் சுமார் 9 ஆயிரம் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. மிகப்பெரிய போக்குவரத்தை மேற்கொள்ளும் ரயில்வேயில் 12 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தினசரி ரயில் இயக்கத்திற்கு இவர்கள் அனைவரது பங்களிப்பும் இருந்து வருகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த ரயில்வேத்துறையை மிக கவனமாக வழிநடத்தவும், மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திடவும் ரயில்வேக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் கொடுத்து வந்தது.

ஆம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ரயில்வேக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு, புதிய ரயில்கள் அறிவிப்பு, விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யும் வழக்கம் இருந்தது வரை, ரயில்வேத்துறை தொடர்பாக மட்டும் விவாதத்தை எம்பிக்கள் நடத்துவார்கள். அப்போது பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்களவை, மாநிலங்களவைக்கு சென்ற எம்பிக்கள் ரயில்வேத்துறை வளர்ச்சிக்கு தேவையான பல கருத்துகளை எடுத்துரைப்பார்கள்.

ரயில் விபத்து தடுப்பு நடவடிக்கைக்கு அரசும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்தது. ஆனால், ஒன்றிய பொது பட்ஜெட்டோடு ரயில்வே பட்ஜெட்டை பாஜ அரசு இணைத்தபின், ரயில்வேத்துறை தொடர்பான விவாதம் ஒருநாள் அல்லது அரை நாளில் நாடாளுமன்றத்தில் முடிந்து விடுகிறது. கவனிப்பார் இல்லா துறையாக ரயில்வேத்துறை மாறி வருகிறது. இதனால்தான், சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் விபத்துகள் தொடர்ந்த வண்ணமாக இருக்கிறது. அதிலும், ஒரு ரயில் மீது மற்றொரு ரயில் மோதும் சம்பவங்களாக நடக்கிறது.

ஒரு தண்டவாள பாதையில் ரயில் நிற்கிறது என்றால், அப்பாதையில் மற்றொரு ரயிலை இயக்கிச் சென்று, பெரும் விபத்துகள் நடக்கும் நிலை அதிகரித்திருப்பது, ரயில்களில் பயணிக்கும் கோடிக்கணக்கான மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதுகாப்பான ரயில் பயணம் என்றிருந்தது, தற்போது பயமான ரயில் போக்குவரத்து என மாறி வருவது, அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கடந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், இரும்பு தாது லோடுடன் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

அப்போது அருகில் உள்ள மற்றொரு பாதையில் வந்த சாலிமர்-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் மீதும் அந்த ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விழுந்தன. கோரமான இந்த ரயில் விபத்தில் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு, சிதறிக்கிடந்தன. 296 பேர் பலியான நிலையில், 1200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாட்டையே இந்த விபத்து உலுக்கியது. இதேபோல், நடப்பாண்டு ஜூன் 17ம் தேதி மேற்குவங்க மாநிலம் நியூஜல்பைகுரி அருகே ரங்கபாணி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரசின் மீது சரக்கு ரயில் பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் 10 பேர் பலியானார்கள்.

60 பேர் படுகாயமடைந்தனர். ஜூலை 18ம் தேதி உத்திரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம், ஜிலாஹி பகுதியில் திப்ரூக்கர்-சண்டிகர் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்தனர். இச்சூழலில் கடந்த 11ம் தேதி சென்னை அருகே கவரப்பேட்டையில் லூப் லைனில் நின்றிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் பாக்மதி எக்ஸ்பிரஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. 13 பெட்டிகள் கவிழ்ந்த நிலையில், அதிஷ்டவசமாக உயிரிழப்புகள் நிகழவில்லை. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2023-24ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 40 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 313 பேர் பலியாகியிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டை கணக்கில் கொண்டால், 638 ரயில் விபத்துகள் நடந்திருக்கிறது. இவ்விபத்துகளில் 748 பேர் பலியாகியிருக்கிறார்கள். 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இப்படி தொடர்ந்து ரயில் விபத்துகள் நடக்க காரணம் என்ன? என்பது அனைவரது மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது.

குறிப்பாக ரயில்களில் பயணிக்கும் மக்கள், இவ்விபத்துகளை பார்த்து, ஏன் இதனை தடுக்க முடியாமல் ரயில்வே நிர்வாகம் திணறி வருகிறது, இதற்கு யார் பொறுப்பு என அடுக்கடுக்கான கேள்விகளை ஒன்றிய அரசின் முன் வைக்கின்றனர். இவ்விபத்துகளுக்கெல்லாம் காரணம், ஊழியர் பற்றாக்குறையே என ரயில்வே தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆம், ரயில்வேத்துறையில் ரயில்களின் இயக்கத்தில் முக்கிய பங்காற்றும் பிரிவுகளாக பொறியியல் பிரிவு, இயக்க பிரிவு, சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவு இருந்து வருகிறது.

இந்த 3 பிரிவுகளிலும் சரியான அளவு ஊழியர்கள் பணியில் இருந்தால் தான், ரயில் பாதையான தண்டவாளத்தையும், ரயில்கள் இயக்கத்திற்கான சிக்னல், பாயிண்டுகளை சரிவர பராமரிக்க இயலும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ரயில்வேத்துறையின் சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவு, இயக்க பிரிவிற்கு போதிய ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால், இப்பிரிவுகளில் 50 சதவீதம் அளவிற்கு காலி பணியிடம் இருக்கிறது. 18 ரயில்வே மண்டலங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

இதன் காரணமாகவே ரயில்வே தண்டவாளத்தை சரிவர பராமரிக்க முடியாமலும், ஒரு பாதையில் ரயில் நிற்கும்போது, அதே பாதையில் மற்றொரு ரயில் சென்று மோதி விபத்துக்குள்ளாவதுமாக நடக்கிறது. மனித தவறு ஒருபுறம் இருந்தாலும், சிக்னல், பாயிண்ட்களை சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, இத்தகைய விபத்துகள் நிகழ்கிறது. நாடு முழுவதும் ரயில்வேத்துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவு மற்றும் இயக்க பிரிவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடம் இருக்கிறது. இதனால், 4 பேர் பார்க்க வேண்டிய வேலையை ஒரு ஊழியர் பார்க்கும் அவலநிலை உள்ளது. இங்கு மட்டுமின்றி நாடு முழுவதும் இந்நிலை இருக்கிறது.

அதனால் தான், ரயில் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. எனவே மிக விரைவாக இயக்க பிரிவு, பொறியியல் பிரிவு, சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் உள்ள காலி பணியிடங்களை ரயில்வே நிர்வாகம் நிரப்பிட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதனை ஒன்றிய அரசு செய்தால் மட்டுமே, ரயில் போக்குவரத்தை விபத்துகள் இன்றி மேற்கொள்ள இயலும்.

* ஆடம்பர விழாவிற்கு செலவாகும் பாதுகாப்பு நிதி
நாட்டில் அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துகளை தடுப்பது குறித்து நெல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரயில் விபத்துகள் நடப்பதற்கும், பாதுகாப்பு குறைபாடுகளுக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம். 10 பேர் பணியாற்றிய இடத்தில் தற்போது 4 பேர் மட்டுமே உள்ளனர்.

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்கள், அதிலும் முக்கியமாக பாதுகாப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுனர்கள், நிலைய அதிகாரிகள், சிக்னல் மேம்பாட்டு ஊழியர்கள், டிராக் மேம்பாட்டு ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். ரயில் இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணியாளர்கள் பணியிடங்களும் 20 சதவிகிதத்திற்கும் மேல் காலியாக உள்ளது. பல்வேறு வழித்தடங்களில் இருப்புப்பாதைகளை புதுப்பிக்கும் பணிகள் சரிவர நடப்பதில்லை. சிக்னல் சிஸ்டம் புதுப்பிக்கும் மற்றும் பராமரிப்பு பணிகள் திட்டமிட்டு நடப்பதில்லை.

12 லட்சம் பணியாளர்கள் உள்ள ரயில்வேயில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பது அவலநிலையாகும். இதனால் ஓட்டுனர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு சரியான ஓய்வு, விடுமுறைகள் மறுக்கப்படுவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது, விளம்பரம் மற்றும் ஆடம்பரமான விழாக்கள் என செலவழிக்கப்படுகின்றன. அதிகாரிகள் ஊழியர்களின் வேலை நேரமும் திறனும் இது போன்ற தேவையற்ற விழாக்களில் வீணாகின்றன.’’ என்றார்.

* தொழில்நுட்ப பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப முன்னுரிமை
ரயில்வேத்துறையில் சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் தொழில்நுட்ப பணியாளர்கள் பணியிடமே அதிகளவு காலியாக உள்ளது. அந்த பணியை மேற்கொள்ளும் ஊழியர்களின் வேலை என்பது ரயில் இயக்கத்திற்கு மிக முக்கியம். அவர்கள் தான், சிக்னல் மற்றும் பாயிண்ட் பராமரிப்பு பணியை சரியாக மேற்கொள்வார்கள். எனவே, அந்த தொழில்நுட்ப பணியாளர் பணியிடத்தை நிரப்ப ரயில்வே நிர்வாகம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* மிகப்பெரிய போக்குவரத்தை மேற்கொள்ளும் ரயில்வேயில் 12 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

* கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ரயில்வேக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு, புதிய ரயில்கள் அறிவிப்பு, விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

* ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ரயில்வேத்துறையின் சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவு, இயக்க பிரிவிற்கு போதிய ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை.

* தற்போது அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் பயமான போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து மாறி வருவது, தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

* மனித தவறு ஒருபுறம் இருந்தாலும், சிக்னல், பாயிண்ட்களை சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, இத்தகைய விபத்துகள் நிகழ்கிறது.

The post நாடு முழுவதும் தொடரும் ரயில் விபத்துகள் காரணம் என்ன? சிக்னல், இயக்க பிரிவுகளில் 50% காலியிடம்: 18 ரயில்வே மண்டலங்களில் 4 பேர் வேலையை ஒருவர் பார்க்கும் அவல நிலை appeared first on Dinakaran.

Read Entire Article