
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு கோர்ட்டுகளில் ஜனவரி 1ம் தேதி வரையிலான நிலவரப்படி 220 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுப்ரீம்கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணை மற்றும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தொடர்பான அறிக்கையை அளிக்க சுப்ரீம்கோர்டுக்கு உதவும் வகையில் வழக்கறிஞர் விஜய் ஹசாரியாவை நியமித்து இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் விஜய் ஹசாரியா தாக்கல் செய்துள்ளார். இதன்படி நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு கோர்ட்டுகளில் 4,732 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டுகளில் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி 220 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.