நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அதிகளவு நைட்ரேட் நச்சு கலப்பு: நிலத்தடி நீர் வாரிய அறிக்கையில் தகவல்

3 weeks ago 3

புதுடெல்லி: நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அதிகளவு நைட்ரேட் நச்சு கலந்துள்ளது தெரியவந்துள்ளது என்றும் 20% மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட நைட்ரேட் செறிவை விட அதிகமாக உள்ளன என்று ஒன்றிய நிலத்தடி நீர் வாரிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நைட்ரேட் நச்சு கலப்பு என்பது சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துக்கு மிக பெரிய பிரச்னையாகும். ஒன்றிய நிலத்தடி நீர் வாரியம் நிலத்தடி நீரின் தரம் குறித்த வருடாந்திர அறிக்கை- 2024 வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மே 2023ல் நிலத்தடி நீரின் தரத்தை சோதிக்க நாடு முழுவதும் மொத்தம் 15,259 கண்காணிப்பு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் 25 % கிணறுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. பருவமழைக்கு முன்னரும் பின்பும் 4,982 நிலையங்களில் ரீசார்ஜ் செய்வது தரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்க்க நிலத்தடி நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன.

20% நீர் மாதிரிகள் நைட்ரேட் வரம்பு லிட்டருக்கு 45 மில்லிகிராம் (மி.கி./லி) என உள்ளது. இது உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய தர நிர்ணய அமைப்பு நிர்ணயித்த வரம்பை விட அதிகம். ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகள் வரம்பிற்கு மேல் 40% இருந்தன. காராஷ்டிராவில் 35.74%, தெலங்கானாவில் 27.48 %, ஆந்திரப் பிரதேசத்தில் 23.5 % மற்றும் மபியில் 22.58 % மாதிரிகளில் அதிக நச்சு இருந்தது. உபி, கேரளா, ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகியவை குறைந்த சதவீதத்தைப் பதிவு செய்துள்ளன.அருணாச்சல பிரதேசம், அசாம், கோவா, மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் அனைத்து மாதிரிகளும் பாதுகாப்பான வரம்பிற்குள் இருந்தன.

ராஜஸ்தான், மபி மற்றும் குஜராத்தில், கடந்த 2015 முதல் நைட்ரேட் அளவு சீராக உள்ளது. உபி, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் அரியானாவில் 2017 முதல் 2023 வரை மாசுபாடு அதிகரித்துள்ளது. அதிக நைட்ரேட் அளவுகள் குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். குடிப்பதற்கும் பாதுகாப்பற்றவை. நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட் அளவு அதிகப்படியான நீர்ப்பாசனத்தின் விளைவாக இருக்கலாம். இது உரங்களிலிருந்து நைட்ரேட்டுகளை மண்ணுக்குள் ஆழமாக தள்ளக்கூடும். கால்நடைகள் வளர்ப்பில் விலங்குக் கழிவுகளின் மோசமான மேலாண்மை பிரச்னையால் அதிகரிக்கிறது. ஏனெனில் அது நைட்ரேட்டுகளை மண்ணில் வெளியிடுகிறது.

நைட்ரேட்டை போன்று புளோரைடு மற்றும் யுரேனியம் ஆகியவையும் நிலத்தடி நீரை அதிகம் பாதிக்கின்றன. ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், யுரேனியம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, நிலத்தடி நீரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. 2023ம் ஆண்டு நிலவரப்படி, 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு பாதுகாப்பு அளவை விட கூடுதலாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது 2017ம் ஆண்டு 359 மாவட்டங்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அதிகளவு நைட்ரேட் நச்சு கலப்பு: நிலத்தடி நீர் வாரிய அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article