நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு; மீண்டும் எழுந்த சர்ச்சை

3 months ago 10

அமிர்தசரஸ்,

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பின்னர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவின் எல்லை வழியே சட்டவிரோத வகையில், அந்நாட்டுக்குள் பலர் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.

இதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளாக இருந்த 104 இந்தியர்கள் கடந்த வாரம் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, அவர்களின் கைகளில் விலங்கு போட்டும் மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் இருந்தன என குற்றச்சாட்டு எழுந்தது. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 116 இந்தியர்கள் நேற்று நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் வந்த விமானம், நள்ளிரவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதில் பஞ்சாப்பை சேர்ந்த 65 பேர், அரியானாவை சேர்ந்த 33 பேர் அடங்குவர். 8 பேர் குஜராத் மாநிலத்தவர் ஆவர். கோவா, உத்தர பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா 2 பேர், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் இமாசல பிரதேச மாநிலத்தில் இருந்து தலா ஒருவரும் இதில் அடங்குவர்.

அவர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டனர் என மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி நேற்றிரவு அமிர்தசரஸ் நகருக்கு வந்தடைந்த தல்ஜீத் சிங் என்பவர் இன்று நிருபர்களிடம் கூறும்போது, விமான பயணத்தின்போது இந்தியர்களின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தன. கைவிலங்கும் போடப்பட்டு இருந்தன என கூறியுள்ளார்.

பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் குராலா கான் கிராமத்தில் வசித்து வருபவரான சிங், புலம்பெயர்வோர் பயன்படுத்தும் சட்டவிரோத வழியில் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். டிராவல் ஏஜென்ட் ஒருவர் தன்னை தவறாக வழிநடத்தி விட்டார் என சிங் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் இன்று காலை 4.30 மணியளவில் அவரவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Read Entire Article