நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கார்கே அறையில் நுழைந்த சிஐஎஸ்எப் படை வீரர்கள்: துணை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு கடிதம்

3 months ago 20

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கார்கேவுக்கு தெரியாமல் சிபிடபிள்யூடி(மத்திய பொதுப்பணித் துறை) அதிகாரிகள், சிஐஎஸ்எப் வீரர்கள், டாடா திட்ட அதிகாரிகள் நுழைந்ததாக தெரிகிறது. இதை கண்டித்து மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கருக்கு கார்கே கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு எம்.பி.யாகவும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் எனது அறையில் நடந்த இந்த ஊடுருவல் எனக்கு அதிக அவமரியாதையை கொடுத்துள்ளது. இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. யாருடைய அதிகாரம் மற்றும் அறிவுறுத்தலின் கீழ் அவர்கள் அனுமதியின்றி எனது அறைக்குள் நுழைந்தார்கள் என்பதை அறிய நான் கோருகிறேன். இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்கட்சித் தலைவரின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

ஜெகதீப் தன்கர் பதில் தர மறுப்பு: கார்கே அலுவலகத்தில் சிஐஎஸ்எப் படை வீரர்கள் நுழைந்தது குறித்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின் அலுவலகத்தை அணுகிய போது, அதிகாரிகள் ‘இந்த விஷயத்தில் இப்போது வரை எந்த பதிலும் இல்லை’ என்று கூறினர். அதே போல் சிஐஎஸ்எப் தரப்பிலும் இந்த விஷயத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், பராமரிப்பு பணிகளுக்காக சென்ற மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக சிஐஎஸ்எப் வீரர்கள் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கார்கே அறையில் நுழைந்த சிஐஎஸ்எப் படை வீரர்கள்: துணை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article