புதுடெல்லி,
'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தை நடத்தி வரும் 'மெட்டா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், ''கொரோனாவுக்கு பிறகு 2024-ம் ஆண்டு இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் ஆளுங்கட்சிகள் தோல்வி அடைந்தன'' என்று அவர் கூறியிருந்தார்.அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி 3-வது தடவையாக ஆட்சியை பிடித்தார் என்றும், எனவே, மார்க் ஜுக்கர்பெர்க் கூறியது தவறான கருத்து என்றும் அவர் கூறினார்.
மேலும், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே, ''மெட்டா நிறுவனத்தை எனது தலைமையிலான நிலைக்குழு விசாரணைக்கு அழைக்கும்'' என்று கூறினார். இதற்கிடையே, 'மெட்டா' நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் சிவநாத் துக்ரால், மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துக்காக மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,கவனக்குறைவால் ஏற்பட்ட இத்தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்தியா தொடர்ந்து எங்களது முக்கியமான நாடாக இருக்கும்" என்று கூறியுள்ளது.