நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

1 month ago 5

புதுடெல்லி,

கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். எனினும், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் 30 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இந்தச் சம்பவத்தின்போது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் நாடாளுமன்றத்தில் இருந்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டு இன்றோடு 23 வருடங்கள் ஆகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் 23-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தாக்குதலில் உயிரிழந்த 9 பேரின் புகைப்படங்களுக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

அதனை தொடர்ந்து மத்திய மந்திரிகள், அமித்ஷா, கிரீன் ரிஜிஜு, குமாரசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Read Entire Article