
நாகர்கோவில்,
நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக தண்டவாளம் அருகே உள்ள குளங்களில் இருந்து மற்றொரு புறத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் மடைகள் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் அருகே ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு தண்ணீர் செல்லும் வழியில் மடை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக தண்டவாளத்தை எடுத்து மாற்றி அமைக்கும் பணியில் நேற்றுமுன்தினம் இரவு ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை நேற்று அதிகாலை 5 மணிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக தண்டவாளத்தின் மேல் ரெயில்கள் இயக்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மின் பாதையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
ஆனால் அதிகாலை 5 மணிக்கு முடிய வேண்டிய பணி 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு தான் முடிவடைந்தது. இதனால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. முக்கியமாக கோவை எக்ஸ்பிரஸ், சென்னை-கன்னியாகுமரி எக்ஸபிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக நாகர்கோவிலுக்கு வரவேண்டிய அனைத்து ரெயில்களும் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்து சேர்ந்தன.
பயணிகள் கடும் அவதி
அதாவது கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4.40 மணிக்கு நாகர்கோவிலுக்கு வந்து சேர வேண்டும். ஆனால் இந்த ரெயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதேபோல் சென்னையில் இருந்து வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைய வேண்டும். ஆனால் இந்த ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக காலை 8.15 மணிக்கே நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு காலை 7.20 மணிக்கு வந்து சேர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில், ஒரு மணி நேரம் தாமதமாக 8.20 மணிக்கு நாகர்கோவிலுக்கு வந்தடைந்தது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு காலை 6.30 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய பயணிகள் ரெயில் காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது. கொல்லம் செல்லும் பயணிகள் ரெயிலும் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
மூட்டை, முடிச்சுகளுடன் பஸ்நிலையத்திற்கு படையெடுத்த பயணிகள்
மதுரையில் இருந்து புனலூருக்கு புறப்பட்ட ரெயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆரல்வாய்மொழியில் நிறுத்தப்பட்டது. இந்த ரெயில் சிறிது நேரத்தில் கிளம்பும் என பயணிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் நேரம் செல்ல, செல்ல ரெயில் புறப்படவில்லை. இது பயணிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே அங்குள்ள ரெயில்வே அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு சென்று ரெயில் எப்போது கிளம்பும் என கேட்டுள்ளனர். ஆனால் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொறுமையிழந்த நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பயணிகள் மூட்டை, முடிச்சுகளுடன் ரெயிலில் இருந்து இறங்கி ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் ஆரல்வாய்மொழி பஸ்நிலையம் நோக்கி பயணிகள் நடந்து சென்றனர். ஒரு சில பயணிகள் கூடுதல் வாடகை கொடுத்து ஆட்டோவை பிடித்து சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். இந்த சம்பவத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
ரெயில் பயணம் தான் வெகுதொலைவில் இருந்து வருபவர்களுக்கு சொகுசாக இருக்கும். ஆனால் இதுபோன்ற பயணம் அமைந்தால் ரெயில் பயணத்தையே மறந்து விடுவார்கள். 3 மணி நேரம் தாமதமாகும் என ரெயில்வே நிர்வாகம் முறையான அறிவிப்பை வெளியிட்டிருந்தால், முன்கூட்டியே ரெயிலில் இருந்து இறங்கி சொந்த ஊர்களுக்கு செல்ல மாற்று ஏற்பாடுகளை செய்திருப்போம் என மனம் நொந்தபடி பயணிகள் நடையை கட்டினர். 3 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு ஆரல்வாய்மொழியில் இருந்து புனலூர் ரெயில் புறப்பட்டது. அதில் கேரளாவுக்கு செல்லும் பயணிகள் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.