நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் சுரங்க நடைபாதைகளில் போலீஸ் ரோந்து: மாணவர்கள் ஓட்டம்

2 hours ago 1


நாகர்கோவில்: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய சுரங்க நடை பாதையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள், மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்துக்கு மாவட்டம் முழுவதும் இருந்தும் பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக நாகர்கோவிலிலும் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் அலுவலகங்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் இளம்பெண்கள், பணியாளர்கள் இங்கிருந்து தான் தங்களது ஊர்களுக்கு பஸ்களில் செல்வார்கள். இந்த பஸ் நிலையத்துக்கு எதிரில் பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. காலை மற்றும் மாலை வேளையில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சுரங்கப்பாதை வழியாகத்தான் சாலையை கடந்து செல்கிறார்கள்.

இந்த சுரங்கப்பாதையில் இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதாக ஏற்கனவே பயணிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, காலை வேளையில் சுரங்கப்பாதையை கடந்து சென்ற பள்ளி மாணவிகளிடம், சுரங்கப்பாதையின் நடுவில் உள்ள ஸ்டீல் கம்பியின் மேல் அமர்ந்து கொண்டு வாலிபர்கள், மாணவர்கள் சிலர் சில்மிஷம் செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த ஆட்ேடா டிரைவர்கள், பொதுமக்கள் கண்டித்தும் வாலிபர்கள், மாணவர்கள் கேட்கவில்லை. இது குறித்து காவல்துறைக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து இன்று (திங்கள்) காலையில் அண்ணா பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியி்ல ஈடுபட்டனர். சுரங்கப்பாதை நடைபாதையிலும் கண்காணித்தனர். காலை 8.30 மணியளவில் பள்ளி சீருடையுடன் மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் சிலர் சுரங்க நடைபாதையில் கும்பல், கும்பலாக நின்றனர்.

போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். மாணவிகள், இளம்பெண்கள் சிலர் சுரங்கப்பாதைக்குள் நின்று போனில் பேசினர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சுரங்கப்பாதையில் போலீசார் ரோந்து வந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர். தொடர்ந்து காலை மற்றும் மாலை வேளைகளில் இது போன்று கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சுரங்கப்பாதை, பஸ் நிலைய நடைபாதைகளில் பொதுமக்களிடம் பணம் பெறும் வகையில் கும்பல், கும்பலாக நிற்பவர்களையும் கண்டித்து போலீஸ் வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் சுரங்க நடைபாதைகளில் போலீஸ் ரோந்து: மாணவர்கள் ஓட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article